அபிவிருத்தியின் பெயரில் நாட்டை கடன் பொறிக்குள் தள்ளிய மஹிந்த

261

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து வரலாற்று முக்கியத்துவமிக்க உரையொன்றைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். இவ்வுரையின் போது பிரதமர் வெளியிட்ட தகவல்கள் நாட்டு மக்கள் மத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஏனெனில் அந்தளவுக்கு நாட்டின் பொருளாதாரமும் நிதி முகாமைத்துவமும் மிக மோசமாகக் கையாளப்பட்டுள்ளமை குறித்த தகவல்களைப் பிரதமர் தம் உரையின் போது வெளியிட்டார். அதன் பிரதிபலன்கள் தான் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் தாக்கம் செலுத்தி இருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நடுவதும், அபிவிருத்தித் திட்டங்களைத் திறந்து வைப்பதும் நாளுக்கு நாள் இடம்பெற்று வந்தன.

ஆனால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அவ்வாறு இடம்பெறுவதாக இல்லையே என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆனால் அதற்கும் பிரதமரின் உரை நல்லதொரு பதிலாக அமைந்துள்ளது.

mahinda-rajapksa-280x210

அபிவிருத்தி என்றால் என்ன? அது எவ்வாறு அமைய வேண்டும்? அதனை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும்? உள்ளிட்ட அபிவிருத்தியோடு தொடர்பான விடயங்களைத் துறைசார் பொருளாதார நிபுணர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் இவ்வாறான விடயங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாது நாட்டின் பொருளாதாரம் கையாளப்பட்டது. அபிவிருத்தி என்ற போர்வையில் நாட்டின் நிதி வீண் விரயம் செய்யப்பட்டது.

இத்திட்டங்களுக்கென கண்டபடி கடன்கள் பெறப்பட்டன. அவ்வாட்சிக் காலத்தில் நிதி முகாமையே வீழ்ச்சியடைந்திருந்தது.

இவ்வாறான சூழலில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மூலம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியானார்.

அப்போது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சி நிலையில் இருந்தது. அச்சமயம் கடனைச் செலுத்த மேலும் கடன் பெறும் நிலைமையும், கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்குக் கடன் பெறும் நிலையும் தான் காணப்பட்டது.

அதாவது முழு நாடுமே கடந்த ஆட்சியாளர்களால் கடன் பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆட்சிக் காலத்தில் வெளிப்படைத் தன்மையற்ற முறையில் மறைமுகமாவும் கடன்கள் பெறப்பட்டுள்ளன.

அதனால் அவ்வாட்சிக் காலத்தில் பெறப்பட்ட கடன்கள் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையை நல்லாட்சி அரசாங்கத்தினர் எதிர்கொண்டனர்.

அதிலும் குறிப்பாக 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது கடந்த ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட முழுக் கடன் தொகையையும் நிதியமைச்சினாலோ, திறைசேரியினாலோ அறிந்து கொள்ள முடியாதிருந்தது.

அதாவது ‘இறுதி யுத்தத்தின் போது பலர் காணாமல் போனார்கள். அவர்கள் பலிக்கடாவாகி விட்டதாகத் தகவல்கள் உள்ளன. ஆனால் அவை உறுதிப்படுத்தப்படவுமில்லை. சடலங்களும் கிடைக்கவில்லை.

அதேபோன்று கடந்த ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட கடன்கள் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது’ என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தம் உரையின் போது சுட்டிக் காட்டினார்.

அதன் காரணத்தினால் தான் சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்றவற்றுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி மேற்கொண்ட கணக்காய்வின்படி கடந்த ஆட்சிக் காலத்தில் 9500 பில்லியன் ரூபா கடன் பெறப்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டிருக்கிறது. என்றாலும் இத்தொகை 10 ஆயிரம் பில்லியன் ரூபாவைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் கூறினார்.

இதன்படி கடந்த ஆட்சிக் காலத்தில் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் கடன்கள் பெறப்பட்டிருப்பது நன்கு தெளிவாகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் உத்தியோகப்பற்றற்ற மன்னராட்சியே இந்நாட்டில் நிலவியது.

அவர்கள் நாட்டையும் நாட்டின் பொதுச் சொத்துக்களையும் தம் குடும்பச் சொத்தாகவே பயன்படுத்தினர். அதன் விளைவுகளையே நாட்டின் பொருளாதாரம் இப்போது எதிர்கொண்டுள்ளது.

இந்நிலைமையிலிருந்து நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டெடுப்பதற்கான உறுதியான வேலைத் திட்டங்களையே நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் மஹிந்த அணியைச் சேர்ந்த ஒரு சிலர் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் புதிதாகச் சிக்கியுள்ளதாக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அத்தோடு வெளிநாடுகளுக்கும் சென்று சந்திப்புக்களை நடத்தி இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

ஆனால் இந்நிலைக்கு அடித்தளமிட்டவர்களே இவ்வாறு பிரசாரம் செய்வது வேடிக்கையானது. இதன் மூலம் அற்ப அரசியல் லாபம் அடைந்திடலாம் என மஹிந்த அணியினர் மனப்பால் குடிக்கின்றனர்.

ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தம் உரையில் ஒரு விடயத்தை தெளிவாகவும் அழுத்தம் திருத்தமாகவும் கூறவும் தவறவில்லை.

நாட்டின் பொருளாதாரம் மரணப்படுக்கையில் இல்லை. நோயாளியைக் கசப்பான மருந்தைக் கொடுத்தாவது குணப்படுத்தி விட முடியும். ஆனால் நாட்டை அழித்தவர்கள் மீண்டும் இந்நாட்டை ச் சீரழிக்க ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. அதனால் இறுதிப் பயணம் சென்ற ராஜபக்ச முகாம் மீண்டும் உயிர் பெற முடியாது’ என்றார் அவர்.

ஆகவே நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களையும் விமோசனத்தையும் நிலையான அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு செயற்பட்டு வரும் நல்லாட்சி அரசாங்கத்தோடு பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதே இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

SHARE