வடகொரிய தலைநகரில் 360 அடி ஆழத்தில் அமைந்துள்ள சுரங்க ரயில் நிலையத்தில் தான் போர் ஏற்படும் அபாயம் எழுந்தால் பொதுமக்களை தங்க வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் இந்த சுரங்க ரயில் நிலையமானது உலகில் மிக ஆழத்தில் அமைந்துள்ள ரயில் நிலையங்களில் முதன்மையானது என கூறப்படுகிறது.
இருவழிப்பாதையாக மொத்தம் 18 மைல்கள் தூரம் கொண்ட இந்த ரயில் நிலையமானது 1968 ஆம் ஆண்டு துவங்கி 1973 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தி வந்தாலும் போர் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தலைநகரில் உள்ள மக்களை பாதுகாக்கவும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிம் ஜோங் உன் அமைச்சரவையில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவர் இந்த ஆண்டு துவக்கத்தில், இந்த ரயில் நிலையம் குறித்து குறிப்பிட்டு, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு வடகொரியா ஒருபோதும் அஞ்சாத என தெரிவித்திருந்தார்.
18 மைல் தூரத்தில் மொத்தம் 17 ரயில் நிலையங்கள் அமைத்துள்ளனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் அந்த பகுதியின் பெயர் சூட்டப்படாமல் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பான பெயர்களை சூட்டியுள்ளதாக குறித்த பகுதியில் பயணம் மேற்கொண்டு புகைப்படங்கள் எடுத்த பிரான்ஸ் புகைப்படக்கலைஞர் தெரிவித்துள்ளார்.