அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 600 மில்லியன் ரூபா நிதி உதவி

97

இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 2018 ஆம் ஆண்டில் இதுவரை ஏறத்தாழ 600 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளது.

அமெரிக்க நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மற்றும் பயனாளிகளை சந்திக்கும் நோக்கில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆயுதங்களை அகற்றுதல் மற்றும் தடுத்தல் தொடர்பான அலுவலகத்தின் தூதுக்குழுவொன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.

இந்தக் குழுவினர் மீள்குடியேற்ற அமைச்சு, தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு நிலையம் மற்றும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவு ஆகியோரை சந்தித்திருந்ததுடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளுக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் ஆய்வுசெய்தனர்.

இந்த விஜயத்தின்போது கண்ணிவெடி அகற்றப்பட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற குடும்பங்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டனர். கண்ணிவெடி அகற்றப்பட்டமையால் தமது அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் மக்கள் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் அறிந்துகொண்டனர்.

2018 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க நிதியுதவியுடன் 1.86 மில்லியன் சதுர மீற்றர்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதுடன், இவற்றிலிருந்து 9,344 கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களும், 8,637 சிறிய ஆயுதங்களின் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE