
உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்தது. வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில், சீனா தன்னை வஞ்சித்து விட்டதாக அமெரிக்கா கருதியது.
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களையும், தொழில் நுட்பத்தையும் சீனா திருடிக்கொண்டு தங்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார். இதை சீன அதிபர் ஜின்பிங் மறுத்தார். ஆனாலும், அமெரிக்கா சீன இறக்குமதிகள் மீது தொடர்ந்து கூடுதல் வரி விதிப்பை அறிவித்தது. சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை உயர்த்தியது.
இப்படி சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கடந்த ஜூலை மாதம் முதல் 250 பில்லியன் டாலர் (1 பில்லியன் என்பது 100 கோடி, ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70) அளவுக்கு கூடுதல் வரியை விதித்தது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் அளவுக்கு அதிக வரியை விதித்தது.இரு நாடுகள் இடையேயான இந்த வர்த்தகப்போர் உலகமெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. இதில் இரு தரப்பு வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்துகிற வகையில், ஜனவரி 1-ந் தேதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்துகொண்டனர். இது 90 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கள் இறக்குமதிக்கு சலுகை
இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யவும், குறைக்கவும் சீன அரசு சம்மதித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க கார்களுக்கு முன்னர் சீனா 40 சதவீதம் வரி விதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.