“அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்” என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

412

 

“அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்” என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், “இந்தியா – சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புவகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இன்று (திங்கள்கிழமை) சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளில், “அமெரிக்க சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். சீனாவுக்கு எதிராக இந்தியாவை திசை திருப்பவே அண்மைகாலமாக, அமெரிக்கா இந்தியாவுடன் அதிகளவு நெருக்கம் காட்டுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக்காலத்தில் இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்க விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக மாற்றிக்கொள்ள தனது பிடிவாதங்களை தளர்த்தி, வேறுபாடுகளை கலைந்து பெரும் முயற்சி எடுத்து வருகிறது என மேற்கத்திய நாளிதழ்களில் வெளியாகியுள்ள சில செய்திகளும் சீன செய்திக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதால் நெருங்கி வந்து சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் திட்டம்.

மிகவும் நேர்த்தியாக, சாதுரியமாக விரிக்கப்பட்டுள்ள இந்த வலையில் இந்தியா சிக்கிவிடக் கூடாது. இந்தியா – சீனா இடையே நிலவும் மிகவும் சிக்கலான பிரச்சினைகளைக்கூட பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இரு நாடுகளும் முன்வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அவர் நாளை டெல்லியில் இருந்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

SHARE