அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னும் இரு தரப்பு உச்சநிலை சந்திப்புக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர்.
சிங்கப்பூரில், செந்தோசாவில் உள்ள கப்பெல்லா ஹோட்டலில் நாளை அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெறவிருக்கிறது.
இந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் நிரந்தரமான, நீடித்திருக்கக்கூடிய அமைதி காக்கும் முறை பற்றி ட்ரம்ப்பும், கிம்மும் கலந்து பேசவிருப்பதாக, வடகொரிய அரசாங்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற பகுதியாக்குவது பற்றியும், இரு தரப்பின் அக்கறைக்குரிய மற்ற விவகாரங்கள் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துபேசுவர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ட்ரம்ப் – கிம்ஜாங் உச்சநிலை சந்திப்பிற்காக சிங்கப்பூர் வந்து சென்றுள்ள ட்ரம்ப் “சிங்கப்பூரில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி, எங்கும் உற்சாகத்தைக் காணமுடிகிறது” என்று இன்று காலை தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப் – கிம்ஜாங் சந்திக்கும் நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க 3,000க்கும் அதிமான பத்திரிகையாளர்கள் சிங்கப்பூரில் முகாமிட்டுள்ளனர்.
உலகின் எதிரி நாடுகளாகப் பார்க்கப்பட்ட வடகொரியா மற்றும் அமெரிக்காவின் சமாதான பேச்சுவார்த்தையை உலகமே எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது.
இருபெரும் அதிபர்களின் சந்திப்பு நடைபெற உள்ளதால் சிங்கப்பூரில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.