அமெரிக்கா, இலங்கை நாடுகளுக்கிடையில் நட்புறவு ரீதியான ஒற்றுமையினை வலுப்படுத்தும் முகமாக இன்று திங்கட்கிழமை அமெரிக்கா நாட்டின் 40 பேர்கொண்ட விசேட மருத்துவ குழுவினர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த குழுவினர் ஐந்து நாட்களுக்கு யாழ். குடாநாட்டில் தங்கியிருப்பதுடன் யாழ். பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் நடமாடும் மருத்துவ சேவையிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளலாய் இடைக்காடு மகாவித்தியாலத்தில் இன்று காலை இடம்பெற்ற நடமாடும் மருத்துவ முகாமில் இந்த விசேட மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விசேட சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
குறித்த நடமாடும் சேவையில் யாழ் போதனா வைத்தியசாலைபணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி, மற்றும் பாதுகாப்புப் படைத்தலைமையக அதிகாரிகள் பங்கேற்றனர்.
எதிர்வரும் நாட்களில் ஊர்காவற்துறை, வேலணை, நெடுந்தீவு, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும் குறித்த குழுவினர் சென்றுஅங்குள்ள மக்களுக்கும் நடமாடும் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.