அரசின் வீட்டுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை பிரதமரிடம் முறையிடுங்கள்: அமைச்சர் நவீன்

274

வடக்கு, கிழக்கில் 65,000 வீடுகளை அமைக்கும் அரசின் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை எழுத்துமூலம் பிரதமரிடம் முறையிடுமாறு எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற பிரதமரின் உரை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  வடக்கு, கிழக்கில் அரசால் நிர்மாணிக்கப்படுகின்ற 65,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக சபையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள இருப்பு வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அது தொடர்பான புகைப்படங்களையும் சபையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது, குறுக்கீடு செய்து அரசின் சார்பில் கருத்தொன்றை முன்வைத்த பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, “இந்த விடயம் தொடர்பில் கட்சியின் சார்பில் பிரதமருக்கு கடிதம் மூலம் முறையிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.

SHARE