அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க முடியாது. தகுதியானோருக்கு மட்டுமே வீட்டுத்திட்டம் – யாழ்.மாவட்ட அரச அதிபர்

266
வீட்டுத் திட்டங்கள் எந்த அரசியல்வாதியினதும் பரிந்துரையின் பேரிலன்றி, அமைச்சின் சட்டத்துக்கு உட்பட்ட தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறவுள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் குடாநாட்டின் அரசியல்வாதிகள் சிலர், தமது அலுவலகங்களில் பதிவுகளை மேற்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்படுவது குறித்துக் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாறான முறைப்பாடுகள் எமது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் எந்த அரசியல்வாதிகளை நாடினாலும், பட்டியல் இறுதி செய்யும் பொறுப்பு மாவட்டச் செயலகத்தையே சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களில் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தெரிவுகள் இடம்பெறும். எந்தக் காரணம் கொண்டும் அரசியல்வாதிகளின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அரசியல்வாதிகளிடம் பதிவுகளை மேற்கொண்டு காத்திருக்காது, கிராம சேவகரின் ஊடாகப் பிரதேச செயலகங்களுக்கு உங்கள் விண்ணப்பங்களைக் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்ப வேண்டும்.

அவ்வாறு கிடைக்கும் விண்ணப்பங்கள் கூட இந்த முறை பகிரங்கப்படுத்தப்பட்ட பின்பே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். முறைகேடான அல்லது தகுதியற்ற விண்ணப்பங்கள் மற்றும் அவற்றை பகிரங்கப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் தொடர்பிலும் ஒரு சில அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட பணியாளர்களை அனுப்பி கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்களிடம் விவரம் கோருவதாகவும் முறையிடப்படுகின்றது.

குறித்த திட்டமானது முழுமையாகவே மக்கள் சார்ந்த திட்டம். இந்தத் திட்டத்தில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது. மக்களின் கருத்தே இறுதியானது என நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு உரிய நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை ஒதுக்கீடுகளை எவ்வாறு அரச திணைக்களங்கள் கட்டுப்படுத்த முடியாதோ, அதேபோல் இந்த நிதியானது மக்கள் திட்டத்துக்குரியது என்ற வகையில் அரசியல்வாதிகள் மக்கள் நலன் சார்ந்த கண்காணிப்பை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

இதனால் ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்துக்கான திட்டமாக மாறிவிடும் என்று அச்சப்படத் தேவையில்லை. அதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

veethanayagam-gggg-600x3376-600x337-e1439192135793

 

SHARE