அந்தக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த எச்சரிக்கையை கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நேற்று விடுத்துள்ளார்.
சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக ஹேரத் ஏற்றுக்கொள்ளப்படாதநிலையில் அவரை அரசியலமைப்பு சபையில் அந்தக்கட்சிகளின் பிரதிநிதியாக அங்கீகரிக்கமுடியாது என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியும் சிறிய கட்சிகளின் வரிசையில் வருகிறது. எனினும் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டமை தமக்கு தெரியாது என்று கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் விஜித ஹேரத்தை விலக்காதுபோனால் ஜனாதிபதி சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பு விவகாரங்களில் தலையிட அமெரிக்காவுக்கு அருகதையில்லை! உதயகம்மன்பில
இலங்கையின் அரசியலமைப்பு விவகாரங்களில் தலையிட அமெரிக்காவுக்கு எந்தவித அருகதையும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில விமர்சித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள உதயகம்மன்பில, சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பான பொறுப்பு இலங்கைக்கு இல்லை.
அவ்வாறிருக்க இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்குமாறு கோரும் பிரேரணையொன்றை முன்வைக்க அமெரிக்காவுக்கு எந்தவித அருகதையும் இல்லை.
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் நாட்டின் சுயமரியாதையைப்பலிகொடுக்கும் வகையில் தலையாட்டி பொம்மையாக நடந்து கொள்கின்றது.
அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு சம அனுசரணையாளராக மாறி, தன் கழுத்தை தானே அறுத்துக் கொள்கின்றது. இந்நிலையில் இலங்கை தானே விரும்பி தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும்போது வேறெந்தவொரு நாடும் அதனைக் காப்பாற்ற முன்வராது.
ஆனாலும் இலங்கை மௌனமாக இருந்தாலும் இந்தியா இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்கவில்லை. இவ்வாறான முயற்சிகள் நாடுகளின் சுயாதிபத்தியம் தொடர்பில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விடும் என்பதால் இந்தியா முன்வந்து திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை மற்றும் அதிகாரப் பரவலாக்கல் இரண்டும் ஒரே உபபிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் அச்சுறுத்தி, அதிகாரப் பரவலாக்கலை சாத்தியப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம். இதனை நாங்கள் அனுதிக்க மாட்டோம் என்றும் உதய கம்மன்பில சூளுரைத்துள்ளார்.