அரசியல் இலாபங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி! வடக்கு சுகாதார அமைச்சர்

180

முக்கிய சேவைகளாக இருக்கின்ற சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளிலும் கூட நிதிகளை மக்களின் தேவைகளை மேம்படுத்தவதற்காக ஒதுக்கீடு செய்கின்ற போது, சரியான தேவைகளை அறிந்து சரியான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிலையம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசியல் தலையீடுகள் காரணமாக எமது நாட்டில் துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் மிக அவசியமானதும், உடனடியாக செய்யப்பட வேண்டிய, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்ற போதும் தேர்தல்களை அல்லது அரசியல் இலாபங்களை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுவதை இங்கே தான் நாங்கள் பார்க்கின்றோம்.

வருடத்தினுடைய இறுதி பகுதியை நாங்கள் அன்மித்திருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட வைத்திய சாலைக்கு அல்லது குறிப்பிட்ட பகுதிக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 30 மில்லியன் ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்து அதனை உடனடியாக டிசம்பர் மாதத்திற்குள் செலவு செய்யுங்கள். எதையாவது வாங்குங்கள் என பலவந்தப்படுத்துகின்றார்கள்.

ஆனால் இங்கே அவசர தேவையாக காணப்படுகின்ற சத்திர சிகிச்சைக்கான கட்டிலை வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை. ஆனால் சில பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஒதுக்கப்பட்ட பணத்தை செலவு செய்ய முடியாத நிலையில் சில வைத்தியசாலைகள் காணப்படுகின்றன.

ஆனால் நிதி இல்லாமல் நாங்கள் திண்டாடி கொண்டிருக்கின்றோம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள ‘விசேட சத்திர சிகிச்சை நிலையம்’ அமைத்ததற்கான கொடுப்பணவுகள் கூட இன்னும் கொடுக்கப்படவில்லை.

குறித்த சத்திர சிகிச்சை நிலையத்திற்கு தேவையான மேலதிக உபகரணங்களை கூட வாங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

நிதிப்பங்கீடுகள் செய்யப்படுகின்ற போது குறிப்பாக அரசாங்கத்துடைய நிதி பொது மக்களின் தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்ற போது முதலில் சரியான தேவையை கண்டறிந்து நடைமுறைப்படுத்தும் நடை முறை எங்களுடைய நாட்டில் இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை.

தலைமன்னார் வைத்தியசாலையில் கட்டப்பட்டுள்ள வைத்திய கட்டிடம் உடைந்த நிலையில் காணப்படுகின்றது.

குறித்த கட்டிடத்தில் பிரசவத்திற்காக பாவிக்கப்படுகின்ற பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டில் பழுதடைந்த நிலையில் ஓர் மூலையில் வைக்கப்பட்டுள்ளதை நேராக அவதானித்தேன்.

எனவே நிதி ஒதுக்கப்படவில்லை, நிதி போதாது என்கின்ற முறைப்பாடுகளுக்கு அப்பால் ஒதுக்கப்பட்ட நிதியை நாங்கள் எந்த அளவிற்கு சரியான முறையில் பயன்படுத்தி சரியான முறையில் சாதித்தோம் என்பது தான் கேள்விக்குறி.

இன்னும் எவ்வளவு நிதிகளை பெற்று கொண்டு எவ்வளவு திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்பதற்கு அப்பால் இருக்கின்ற எங்களுடைய மனித வளங்கள் குறிப்பாக வைத்திய நிபுனர்களில் இருந்து சாதாரண சுகாதார சேவைகள் உதவியாளர்கள் வரைக்கும் இருக்கின்ற ஆளனியை வைத்துக் கொண்டு திறம்பட சுகாதார சேவையை வளர்ப்பதற்குரிய மன நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

நான் வாங்குகின்ற பணத்திற்கு இம்மாதம் நான் செய்த சேவை சரியாக இருந்ததா? என்று கணக்கு பார்க்க வேண்டும்.

எங்களுடைய சுகாதார அமைச்சில் மேலதிக நேரக் கொடுப்பணவிற்காக வழங்கப்படுகின்ற கொடுப்பணவுக்கு சமனாக எந்த அமைச்சினாலும் வடமாகாணத்தில் வழங்கப்படுவதில்லை.

ஏன் என்றால் அந்த அமைச்சுகளுக்கு அவ்வளவு பணம் தேவைப்படுவதில்லை.

30 நாட்களும் நாங்கள் வேளை செய்து தான் அந்த 30 நாற்களுக்குமான மேலதிக நேர கொடுப்பணவை பெற்று கொண்டேனா என்பதனை மனசாட்சியுடன் சிந்தியுங்கள்.

நாங்கள் பணம் இல்லாமல் இருக்கின்றோம்.கடமை புரியாத நாட்களுக்கான பணத்தை என் கைவாங்க கூடாது. வேளை செய்யாத நற்களுக்கான மேலதிக நேர கொடுப்பணவை கேட்காமல் இருப்பது பரவாயில்லை.

இதனை கூற ஒரு காரணம் இருக்கின்றது. மேலதிக நேரக் கொடுப்பணவை வழங்க நாங்கம் மிகவும் கஸ்டப்படுகின்றோம்.

கேட்டால் திறைசேரியில் பணம் இல்லை என்கின்றார்கள். மாகாணத்திலும் பணம் இல்லை. மத்திய அரசிலும் பணம் இல்லை. பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.

எனினும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் அவ்வளவு தொகை பணத்தை பெற்று நாங்கள் வழங்கும் போது அதற்கான சேவை முழுமையாக கிடைக்காது குறைகள் இருக்குமாக இருந்தால் மக்களினால் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ளுவதில் மனக்கஸ்டமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE