அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? ஆட்சியாளர்களே பதில் சொல்லுங்கள்

255

FILE - In this Wednesday, Oct. 14, 2015 file photo, family members of ethnic Tamil detainees sit for a silent protest in Colombo, Sri Lanka. Sri Lanka's government has pledged to quickly process hundreds of ethnic Tamils who have been detained without charges for years on suspicion of links to former Tamil Tiger rebels. Placards read "Release all political prisoners now." (AP Photo/Eranga Jayawardena, File)

இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களே, அதிகார வர்க்கத்தினரே உங்கள் அரசியல் சதுரங்கத்தின் பகடைக்காய்களாக தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் எத்தனை காலங்கள் பயன்படுத்த போகின்றீர்கள்.

கொடிய போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்று வரை விடுதலை செய்யப்படாததன் காரணம் என்ன?

நல்லிணக்கத்திற்கு வாருங்கள் ஒருமைப்பாட்டினை பேணுங்கள் என்று வெறும் அறிக்கைகள் விடுகின்ற நீங்கள் உண்மையிலே நல்லிணக்கத்தை விரும்புகின்றவர்களாக இருந்தால் ஏன் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கூடாது?

இவர்களை விடுதலை செய்வதனால் என்ன பாதிப்பு ஏற்பட போகின்றது. பத்து, இருபது ஆண்டுகளாக இவர்கள் சிறையிலே தடுத்தது வைக்கப்பட்டு வதைக்கப்படுகின்றார்கள். இவர்களில் விடுதலை எப்போது?

அநீதியான முறையில் இன்று வரைக்கும் இவர்கள் கொடிய சிறைகளிலே வதைக்கப்படுவது தமிழர்கள் மத்தியிலே பாரிய தாக்கத்தையும் ஒரு விரக்தியினையும் எற்படுத்துகின்றது.

தமது விடுதலைகாக பல முறை அவர்கள் கோரிக்கை விடுத்தும், உண்ணாவிரதம் இருந்தும் அவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டாமைக்கான காரணம் என்ன?

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே பல தாக்குதல் சம்பவங்களில் பங்கெடுத்த கருணா, குமரன் பத்மநாதன் போன்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமாயின், சிறு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாததன் பின்னணி என்ன?

இதற்கான பதிலை தர வேண்டிய பொறுப்பும், கட்டாயமும் இன்று உங்களுடையதே. ஆட்சியாளர்களே பதில் சொல்லுங்கள். வியாபார அரசியலில் பகடைக்காய்களாக இன்னும் எத்தனை காலங்கள் இந்த அரசியல் கைதிகளைப் பயன்படுத்தப் போகின்றீர்கள்.

சிறைச்சாலைகளில் பல்லாயிரம் குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட அங்கே தடுத்து வைக்கப்படக் கூடாது என்று சட்டப் புத்தகங்கள் சொல்லுகின்றன.

ஆனால் பூசாவிலும், வெலிக்கடையிலும் எத்தனை நிரபராதிகள் அநீதியான முறையிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, நீதி மன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என சட்டம் சொல்கின்றது.

ஆனால் பத்து வருடங்களுக்கு மேலாகவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், நீதி மன்றில் முன்னிலைப் படுத்தாது , எத்தனையோ தமிழர்கள் இன்று வரை தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, அநீதியான ஒன்றே.

நல்லிணக்கம், நல்லாட்சி என்று நீக்கள் கூறுவது வெறும் ஏமாத்து வித்தை என்பது இங்கே தெளிவுபெறுகின்றது. எனவே, வெறும் மந்திர சொற்களால் தமிழர்களை இனியும் ஏமாற்றி அரசியல் இலாபம் தேடுவதை தவித்து, தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை எற்றுக் கொள்ள வேண்டிய தேவை உங்களுடையதே.

எத்தனை ஆயிரம் தமிழர்களின் படுகொலைக்கு காரணமான நீங்கள் ஒரு சிறிய பாவ மன்னிப்புக்காக ஏன் இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது.

நாம் செய்த தவறு என்ன? நாம் எதற்றகாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் என்று தெரியாது சிறைகளிலே வாடும் இந்த அப்பாவிகள் படும் வேதனைகளும் வருத்தங்களும் இன்னும் எத்தனை காலங்கள் நீடிக்கப் போகின்றது.

advertisement

குடும்பம், பிள்ளைகள் என்று சமூகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டிய இவர்கள் உறவுகளை இழந்து ஒரு ஏக்கத்துடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் ஏராளம் விசாரணை என்ற பெயரிலே அங்கே அரங்கேறும் மனிதாபிதமானமற்ற செயல்கள் ஏராளம்.

இவற்றை எல்லாம் அனுபவித்தவன் என்ற வகையிலே அதன் வலிகளும், வேதனைகளும் எனக்கும் தெரியும். ஆம் தமிழ் பேசிய காரணத்திற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பூசா வதை முகாமிலே சிறுகாலம் எனது நாடகளும் நகர்ந்தன.

எனவே, அங்கே அரங்கேறும் அநீதிகளை எனது கண்களால் கண்டவன். அதை அனுபவித்தவன். பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரனை அதிகாரிகள் விசாரனை என்ற பெயரிலே ஆபாசமாக பேசுவதும், கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும் எந்த சட்டத்தில் உள்ளது.

இரவு வேளைகளிலே விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டு அங்கே கேட்கப்படும் கேள்விகள் எத்தனை. ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒவ்வொரு அடி. உடலாலும், மனதாலும் எவ்வளவு வேதனைகளை ஒரு மனிதனுக்கு கொடுக்க முடியுமோ அவை அனைத்துமே தமிழர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.

நான் குற்றமற்றவன் என்னை விடுதலை செய்யுங்கள் என்று கேட்டால், கைதியிடம் ஆபாசமாக பேசுவது எந்த சட்டத்தின் அடிப்படையிலே?

மறப்போம் மன்னித்து விடுவோம். இவற்றையெல்லாம் எப்படி மறப்பது? நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஊடக அறத்தின் அடிப்படையில் நாகரிகமான முறையில் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறான கேள்விகளால் செவிகளிலே இரத்தம் வழிய, கண்ணீரோடு இன்று வரை விடுதலைக்காய் போராடும் உறவுகளின் நிலை என்ன?.

மாற்றத்திற்கான அரசு என்றும், நல்லாட்சிக்கான அரசு என்றும் கொக்கரிக்கும் இன்றைய ஆட்சியாளர்களே? நீங்கள் செய்ய வேண்டியது பாரிய தியாகம் அல்ல.

குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யாது பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதுவரை காலமும் அவர்கள் சிறையிலே தடுத்துவைக்கப்பட்ட அவர்களது தண்டனைக் காலமாக கருதி உடனே விடுதலை செய்யுங்கள்.

இனியேனும் அவர்கள் சிறிதுகாலம் குடும்பத்துடன் வாழட்டும். பயங்கரவாத தடைச்சட்டம் என்னும் கொடிய அஸ்திரத்தினால் எத்தனை பட்டதாரிகளைப் படுகொலை செய்தீர்கள்.

எத்தனை ஆயிரம் தமிழர்களை சிறைப்படுத்தினீர்கள். ஆனையிறவினிலே உங்களால் வதைக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பூசாவிலும் வெலிக்கடையிலும் சிறைப்பட்ட தமிழர்கள் தான்.

தமிழர்களைப் பொறுத்தவரை பூசாவும் வெலிக்டையும் புண்ணிய தலங்களே.சிறைச்சாலைகளோ, சித்திரவதைக் கூடங்களோ அவர்களை வதைக்குமே தவிர, அவர்களின் சிந்தனையினை ஒரு போதும் சிதைக்காது.

எனவே, அநீதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் நல்லிணக்கத்துக்கான சிறிது சமிக்ஞைகளை காட்டுங்கள்.

நான் பூசா தடுப்பு முகாமிலே தடுத்து வைக்கப்பட்ட போது அங்கே ஒரு சுவரிலே ஒரு கரி துண்டினால் இருந்த வசனம் எழுதப்பட்டிருந்தது.

சாதிக்க இருந்த சாதனைக்கு முன்னேரே இருந்த முயற்சி, இளமை தந்த காதலுக்கும், காதல் கனவுகளுக்கும் கைதி என்று சிறையில் தள்ளியது இந்த சிங்கள அரசு.

இந்த வரிகளிலே உள்ள வேதனை அனுபவித்தால் மாத்திரமே உணர்ந்து கொள்ள முடியும். இனியும் உங்கள் அரசியல் சதுரங்க விளையாட்டினை இவர்கள் விடயத்திலே நிறுத்தி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டிய அவசியமும், தழிழ் மக்களின் வாக்குகளினால் இன்று அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள் என்ற வகையிலே பொறுப்பும் உங்களுடையதே.

SHARE