தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கான எவ்வித ஆலோசனைகளோ, ஆவணங்களோ தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
32 தமிழ் அரசியல் கைதிகள் 9ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்படுவர் என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், பின்னர் இன்று 11ஆம் திகதி 32 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய இன்று காலை சுமார் 20இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து இதுவரை எவ்வித அறிவித்தல்களும் தமக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.
இதனையடுத்து வெளியே அழைத்துவரப்பட்ட சிறைக் கைதிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
: தமது விடுதலைக்கான போராட்டம் தொடரும் எனவும், தமது உயிர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் முன்னரே அறிவித்ததற்கமைய உடல் உறுப்புக்களை தானம் செய்வதாகவும் வெளியே கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.