அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, ‘இனப் பிரச்சினைக்கான தீர்வை பெறும் வாய்ப்புண்டு’

288

இறைமகன் இயேசுவின் நாசரேத்து பிரகடனத்தில் (லூக்கா 4:18 – 19) ‘சிறைப்பட்டோருக்கு விடுதலை’ முக்கியமான ஒரு கூறு. சிறையிலிருப்போரை மனிதத்துடன் நோக்கும் மனப்பான்மை நல்லோருக்கு அடையாளம் (மத்தேயு 25:36,43).

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி நவம்பர் 08 முதல் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுபட்டு வருகின்றனர். நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் இவர்களுக்கு விடுதலையும் வழங்கப்படவில்லை, இவர்களின் விடுதலை தொடர்பான பொருத்தமான பொறிமுறையும் முன்வைக்கப்படவில்லை. இவர்களை நிபந்தனைகளின்றி உடனடியாக விடுதலை செய்யும்படி வன்னி கிறிஸ்தவ ஒன்றியம்; அரசை கோருகிறது.

இவர்களது விடுதலையில் அரசு பொறுப்பாக இயங்காமையை நாம் கண்டிக்கிறோம். இத்தகைய பொறுப்பற்ற தன்மையையே இதுவரை ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகளிடமிருந்து தமிழர் பெற்றுள்ளனர்; இது தான் பலர் அரசியல் கைதிகளாவதற்கும் காரணமாகியது என்பது வரலாறு.
.
‘அரசியல் கைதிகள்’ என்போர் இனப்பிரச்சினையின் இருப்பையும் அதன் கொடூரத்தையும் வெளிக்காட்டும் ஒரு யதார்த்த விவகாரம். இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாத வரை நல்லிணக்க முயற்சிகள் நடைமுறைக்கு காத்திரமானவையாக வாய்ப்பில்லை. ஒடுக்குமுறை கட்டமைப்புகளின் இருப்பு மனிதத்தின் உயிர்ப்புக்கு எதிரப்பே. இதனால் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக அறிக்கை குறிப்பிட்டபடி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யும்படி வன்னி கிறிஸ்தவ ஒன்றியம்; இலங்கை அரசை அழைக்கிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி மனிதத்துடன் வாழ்கிறோம் என உறுதி செய்வது இலங்கையர் அனைவரதும் கடமை எனவும்  நாம்; குறிப்பிட விரும்புகிறோம்.

மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி)யினர்; எப்படி விடுதலை செய்யப்பட்டனரோ அதேபோல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும். அத்துடன் பிணைவழங்கி தொடர்ந்தும் குற்றவாளிகளாக சித்தரிப்பது, சிலரை மட்டும் முதலில் விடுவித்து கைதிகளின் உறவை உடைப்பது எல்லாம் பொருத்தமான நடவடிக்கைகள் அல்ல.

‘நல்லாட்சிகாக’ உழைத்த, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் அவர்களது சாவுடன் நல்லாட்சி அழிந்துவிடக்கூடாது. அவரது இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ள எதிர்வரும் வியாழக்கிழமையை தேசிய துக்கதினமாக பிரகடனம் செய்துள்ள அரசு, உண்மையுடன் பொருத்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நல்லாட்சியை உறுதி செய்யவேண்டும். இதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், உடனடியாக நிபந்தனையின்றி அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும், இனப்பிரச்சனைக்கான தீர்வை பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் பொதுவான காத்திரமான பங்களிப்புடன் பெற முன்வரவேண்டும். எனவே  அரசியல் கைதிகளை விடுதலை செய்து, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வை பெறும் வாய்ப்புண்டு’ என்பதை ஒரு குறிகாட்டியாக வெளிப்படுத்த நாம் இலங்கை அரசை கோருகிறோம், இதற்குரிய ஒத்துதுழைப்பை இதயசுத்தியுடன் வழங்க அனைவரையும் அழைக்கிறோம்.

வன்னி கிறிஸ்தவ ஒன்றியம், வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம்

SHARE