அரசியல் கைதிகள் எவருமே இல்லை – உலகப் பொருளாதார மாநாட்டில் ரணில் தெரிவிப்பு

224
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் அதன் பக்க நிகழ்வாக செய்தியாளர்களிடம் பேசுகையில், இருப்பவர்கள் எல்லோரும் தண்டனை விதிக்கப்பட்டவர்களே என்றும் தெரிவித்தார்.

உலகப் பொருளாதார மாநாட்டில் இலங்கை முதல் தடவையாக இந்த ஆண்டு கலந்து கொண்டுள்ளது. 50ற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாநாட்டிற்கு இந்த ஆண்டே இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டின் பக்க நிகழ்வாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இந்தச் சதிப்புக்களில் செய்தியாளர்களிடம் ரணில் விக்ரமசிங்க பேசியபோது, நல்லிணக்க முயற்சிகள், பொறுப்புக்கூறல், அரசியல் கைதிகள் விடுதலை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

பதிலளித்த பிரதமர், இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றார்.

தமிழர்கள் அல்லது சிங்களவர்கள் என்று எவரும் அரசியல் கைதிகளாக இல்லை. இருக்கின்ற 200 வரையானோர் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள். அவர்களை விடுவிப்பதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன என்றார் பிரதமர்.

அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையிலும் அமைச்சர்கள் பலரும் இதனையே கூறி வந்த நிலையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உலக அரங்கில் தற்போது அரசியல் கைதிகள் எவரும் இல்லை, இருப்பவர்கள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களை விடுவிப்பது தொடர்பில் அரசுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவரும் நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நல்லிணக்கம் குறித்த முயற்சிகள் ஆரம்பம்

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு, தேர்தல் மறுசீரமைப்பு குறித்து தமிழ்க் கட்சிகளுடனும் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியாக நாடாளுமன்றத்தை அரசமைப்புச் சபையாக மாற்றி இருப்பதாகவும் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் ஒரு கூட்டு அரசு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இழுவைப் படகு மூலமான மீன்பிடி! தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு! – பிரதமர் ரணில் சுட்டிக்காட்டு

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், அவர்கள் இழுவை மடி மீன்பிடியில் ஈடுபடுவதால் அனுமதி வழங்க முடியாது. இவ்வாறு சுவிஸ் டாவோஸ் நகரில் தெரிவித்தார் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

அத்துடன், தமிழகத்தில் இழுவை மடி மீன்பிடியில் தமிழ்நாட்டின் பலம் மிக்க அரசியல்வாதிகள் தொடர்புபட்டிருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் முதலீட்டு அமையம் ஏற்பாடு செய்திருந்த முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்த மீன்பிடியில் ஈடுபடுவது பெரும் பிரச்சினை என்று கூறிய அவர், இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு இந்திய மீனவர்கள் கேட்கிறார்கள். எனினும், இழுவை மடி மீன்பிடியில் அவர்கள் ஈடுபடுவதால், அவர்களது கோரிக்கையை ஏற்க முடியவில்லை. அதனை அவர்கள் கைவிட்டால் அவர்களது ஏனைய கோரிக்கைகள் குறித்து சாதகமாகப் பரிசீலிக்க முடியும்.

ஆனால், இழுவை மடி மீன்பிடியில் தமிழகத்தின் பலமிக்க அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதால் அதனை நிறுத்த முடியவில்லை என்று மேலும் தெரிவித்தார்.

SHARE