அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பான ராஜிதவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது – அருட்தந்தை சக்திவேல்

137

தெற்கில் புரட்சியில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ததுபோல், அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும் என அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்தை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல், தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் மட்டுமல்ல, காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் விடயங்கள் என்பவற்றில் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது.

நல்லாட்சி அரசு தள்ளாடிக் கொண்டிருக்கின்ற வேளையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் அரசியல் கைதிகள் தொடர்பான வார்த்தைப் பிரயோகங்களால் தமிழ் மக்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் அதுவே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வலுவூட்டும் என ராஜித கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடுவோரில் பலர் தமது இளமைக் காலத்தை இழந்துவிட்டனர். பலர் உடல், உள நோய்களுக்குள்ளாகியுள்ளனர். நீண்டகால பிரிவால் குடும்பங்களை இழந்தோரும் உள்ளனர். இவர்களுக்கு சுகாதார அமைச்சரின் வார்த்தை ஆறுதலாக அமைகின்றது.

அரசு அரசியல் தீர்மானமெடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்கையில் வடக்கையும் தெற்கையும் ஒரே தராசில் அரசு கண்ணோக்குகின்றது என தமிழ் மக்கள் சிந்திக்க இடமுண்டு.

அத்தோடு, அரசியல் கைதிகள் இந்நாட்டிலுள்ளனர் என்பதை ஆட்சியாளர் ஏற்றுக்கொண்டு அவர்கள் விடுதலை செய்யப்படின் நல்லாட்சியின் மீது தமிழ் மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்கும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE