மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பத்து வருட ஆட்சிக் காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, புதிய ஆட்சித் தலைமை ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடமும் எட்டு மாதங்களும் நிறைவு பெறப் போகின்றது.
அதேசமயம் ஜனாதிபதித் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் கூட்டரசாங்கம் உருவாகி ஒரு வருடம் நிறைவு பெற்று விட்டது.
ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த இருபது மாத காலப் பகுதியில் நாட்டில் நிறையவே மாற்றங்கள் நடந்துள்ளன.
பத்து வருட காலத்துக்குப் பின்னர் உண்மையான ஜனநாயகத் தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது, உயிர் அச்சுறுத்தல்கள் நீங்கியுள்ளன, ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள், அரச வளங்களின் வீண் விரயம் என்பதெல்லாம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது, உண்மையான கருத்துச் சுதந்திரமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டின் சாதாரண குடிமகன் ஒருவன் கூட ஆளுந்தரப்பினரை வெளிப்படையாக விமர்சிக்கின்ற ஜனநாயக உரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் இப்போது கொண்டிருக்கின்றான்.
இவ்வாறான உரிமைகளெல்லாம் முன்னைய ஆட்சிக் காலத்தின் போது நாட்டு மக்களுக்குக் கிடைத்திருக்கவில்லை.
முன்னைய ஆட்சியின் போது அரசாங்கத்தையும், ஆளும் தரப்பிலுள்ள அதிகார பலம் வாய்ந்தோரையும் விமர்சித்தவர்களுக்கு நேர்ந்த கதி என்னவென்பதை நாடே அறியும்.
முன்னைய ஆட்சிக் காலத்தின் போது மர்மமான முறையில் காணாமல் போன அல்லது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், பொதுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் போன்றோரை உள்ளடக்கிய பட்டியல் மிகவும் நீண்டது.
ஜனநாயகத் தன்மை தோற்றுவிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் நாடெங்கும் உண்மையான அமைதிச் சூழல் இன்னுமே உருவாகியதைக் காண முடியாதிருக்கிறது.
தென்னிலங்கையில் ஆளும் தரப்புக்கும் எதிரணிக்கும் இடையே அரசியல் யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது.
மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட முன்னைய ஆட்சியாளர்களில் ஒரு தரப்பினர், தங்களது தோல்வியை இன்னுமே ஜீரணித்துக்கொள்ளும் திராணியற்றவர்களாக உள்ளனர்.
அதிகார போதைக்கு அடிமையாகிப் போன அவர்கள், எவ்வாறாவது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளலாமென்ற நம்பிக்கையில் நாட்டில் குழப்பகரமான அரசியல் கலாசாரமொன்றை ஏற்படுத்தி வருகின்றனர்.
நல்லிணக்கம், ஜனநாயகம், அரசியல் விழுமியம் என்பதையெல்லாம் அலட்சியம் செய்த நிலையில் எதிரணியினர் களத்தில் நிற்கின்றனர்.
மஹிந்த தலைமையிலான எதிரணியினரின் உள்நோக்கம் அரசுக்கு நன்கு புரிகிறது, நேர்மையாகச் சிந்திக்கக் கூடிய சிங்கள மக்களுக்கும் புரிகிறது.
ஆனாலும் சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் எதிரணியினரின் அரசியல் தந்திரோபாயங்களின் உள்நோக்கங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே இன்னும் உள்ளனர்.
சிங்கள மக்களின் இவ்வாறான புரிதல் அற்ற சிந்தனைக்கு மாறாக அரசாங்கம் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளது.
சிறுபான்மையினர் விவகாரம், மனித உரிமை விடயங்கள், ஊழல் முறைகேடு தொடர்பான விசாரணைகள், வெளிநாட்டுக் கடன் சுமையிலிருந்து விடுபடுதல் போன்ற பல்வேறு திட்டங்களிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை சிங்கள மக்களில் ஒரு பிரிவினர் எதிர்மறையாகவே இன்னும் நோக்குகின்றனர்.
மஹிந்த அணியினர் முன்னெடுத்து வருகின்ற தவறான பிரசாரங்களே இதற்கெல்லாம் காரணமென்பது புரியாததல்ல.
இவ்வாறான எதிரும் புதிருமான அரசியல் யுத்தத்தின் விளைவினாலேயே சிங்கள சமூகம் இப்போது குழம்பிப் போய் நிற்கிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தூய்மைப்படுத்துவதற்காக கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரி தற்போது முன்னெடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் தென்னிலங்கையிலுள்ள சுதந்திரக் கட்சி அபிமானிகள் எவ்வாறான கண்ணோட்டத்தில் நோக்கப் போகின்றார்களென்பது இன்னுமே தெரியாதிருக்கிறது.
நாட்டின் தெற்கு நிலைமை இவ்வாறிருக்கையில் வடக்கு, கிழக்கில் நிலவுகின்ற சூழலையும் இங்கே சுருக்கமாக ஆராய வேண்டியிருக்கிறது.
வடக்கு, கிழக்கில் சிறுபான்மையினர் எதிர்கொண்டிருந்த அச்சம் முழுமையாக நீக்கப்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறை நீங்கியுள்ளது.
இராணுவத்தினர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்காக கையகப்படுத்தியிருந்த பொதுமக்களின் காணிகளில் பெருமளவானவை விடுவிக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான காரியங்களில் அரசாங்கம் தீவிரமாகவே ஈடுபட்டு வருகிறது.
ஆனாலும் இவ்வாறான காரியங்கள் அங்குள்ள மக்களின் பிரதான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து விடப் போவதில்லை.
அரசியல் தீர்வு விடயத்தில் கடந்த சுமார் ஒன்றேமுக்கால் ஆண்டு காலமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நகர்வுகள் திருப்தியளிப்பதாக இல்லை.
அரசின் முயற்சிகள் செயலுருப் பெறாமல் தாமதமடைவதற்கு எதிரணியின் முட்டுக்கட்டைகளே காரணமென்பது அறியாத விடயமல்ல.
ஆனாலும் முட்டுக்கட்டைகளைத் தாண்டுவதில் அரசின் வேகம் திருப்தி தருவதாக இல்லையென்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் வடக்கு, கிழக்கைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளால் இன்னுமே சமாந்தரமான பாதையில் பயணம் செய்ய முடியாதிருக்கிறது.
இரு தரப்பிலுமே இருவேறு விதமான போக்காளர்கள் இருக்கின்றார்கள்.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டுமென்ற அரசியல் முதிர்ச்சி கொண்ட பிரதான அரசியல் கட்சிகள் தமிழ், முஸ்லிம் தரப்புகளில் உள்ளன.
அதேசமயம் இனவாதத்தைத் தூண்டுவதன் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெறுவதற்கு நினைக்கின்ற அரசியல் கட்சியும் அங்கு உண்டு.
இவ்வாறான பேதங்களுக்கு மத்தியில் தமிழ், முஸ்லிம் மக்களை பொதுக்கொள்கையொன்றின் கீழ் கொண்டு வருவதென்பது சாத்தியமான காரியமல்ல.
சுயநலமிக்க அரசியல் அமைப்புகள் அதற்கு இடமளிக்கப் போவதுமில்லை.
இவ்வாறான அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை எவ்வாறுதான் முன்கொண்டு செல்வது?
நாட்டின் இன்றைய ஆட்சியானது பொதுவான மேம்பட்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்கியிருக்கின்ற போதிலும், அரசியல் தீர்வுக்கான சாத்தியமென்பது நம்பிக்கை அளிப்பதாக இல்லை.