அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள திருநம்பி மாணவர்கள்

172

பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய இரண்டு மாணவர்கள் அரசு அறிமுகம் செய்துள்ள கல்வித்திட்டம் தங்களைப் போன்றோருக்கு பாதகமாக இருப்பதாகக் கூறி அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

டொரண்டோவைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களான Ryan (15) மற்றும் Noah (15) என்னும் இருவர், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாலியல் கல்வி, தங்கள் போன்ற மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கல்வித்திட்டம் முறையானதாக இருந்ததாக தெரிவிக்கும் அந்த மாணவர்கள், அதையே மீண்டும் நடை முறைப்படுத்தக் கோரியுள்ளனர்.

மேலும் கல்வித்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக, நஷ்ட ஈடாக 15,000 டொலர்கள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

Justice for Children and Youth என்னும் சட்ட அமைப்பின் வழக்கறிஞரான Andrea Luey, இந்த மாணவர்கள் சார்பாக ஒண்டாரியோவின் மனித உரிமைகள் அமைப்பில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இனி கல்வித்திட்டத்தில் எந்த மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அவை, ஒண்டாரியோவின் மனித உரிமை விதிகளுக்கு உட்பட்டே செய்யப்படவேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும் அவர்கள், கல்வி அமைச்சரான Lisa Thompson மற்றும் அவரது துறை சார் அதிகாரிகள் கல்வித்திட்ட மாற்றம் குறித்து கூறியுள்ள கருத்துகள் மனித உரிமை விதிகளுக்கு மாறானவை என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

Lisa Thompson 2015 கல்வித்திட்டத்திற்கு பதிலாக 1998 கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அவர் பாலியல் அடையாளம், பாலியல் வெளிப்பாடு, ஒரு பால் குடும்பங்கள், வெளிப்படையாகத் தெரியாத குறைபாடுகள், HIV போன்ற அனைத்து விடயங்களையும் கல்வித்திட்டத்திலிருந்து அகற்றி விட்டார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், திருநங்கைகள், திருநம்பிகள் குறித்த அறியாமையிலிருக்கும் மாணவர்கள் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை அறியாமலே போய் விடுவார்கள் என்றும் இதனால் அறியாமையால் அவர்கள் மரியாதை குறைவாக நடத்தப்படும் ஒரு சூழல் உருவாகிவிடும் என்றும் அந்த மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

SHARE