அரசு மருத்துவமனையில் நோயாளிகளை தரக்குறைவாக பேசிய அரசு மருத்துவர் – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?
சிவகங்கை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை தரக்குறைவாக மருத்துவர் ஒருவர் பேசியது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகளவில் நிகழ்ந்து வரும் நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவருகின்றன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மர்ம காய்ச்சளால் பாதிக்கப்பட்டு அதிகளவில் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் வழக்கத்தைவிட நோயாளிகள் மற்றும் அவர்களுடன் உதவிக்கு வருபவர்கள் என கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அவ்வாறு வரும் நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் அமர்வதற்கான இருக்கைகள் பற்றாக்குறையால் வெளியில் உள்ள காலி இடங்களிலும், படிக்கட்டுகளிலும் அமரும் நிலை ஏற்படுகிறது. மேலும் நோயாளிகளுடன் உதவிக்கு வருபவர்களை நோயாளியைத் தவிர உள்ளே விடுவதில்லை.
இந்நிலையில் சிகிச்சை முடித்து வெளியே வரும் வரை உதவிக்கு வருபவர் வெளியில் அமரும் சூழல் உள்ளது. அவ்வாறு அமர்ந்திருப்பவர்களை அமரக்கூடாதென்றும், வேறு எங்கு உட்காருவது எனக்கேட்ட நோயாளிகளிடம் அவர்களை இங்கே உட்காராதே போய் தொலைடா நாயே, முட்டாப்பயலே, அறிவு கெட்டவனே என்று தரக்குறைவாகவும் மருத்துவர் ஒருவர் பேசியது அங்குள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நோயால் உடல் வேதனை ஒருபுறம் இருக்க பொறுப்பில்லாத இந்த மருத்துவர், அவர்களுக்கு மனவேதனை அளிக்கும்படி பேசியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நோயாளிகளும், பொதுமக்களும் குமுறுகின்றனர்.