காணியற்றவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் காணிகளை விற்பனை செய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணியற்றவர்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெருகல் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் வழங்கும் பெறுமதியான இந்த காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினருக்காகவும் பாதுகாக்க வேண்டும்.
உங்கள் பிள்ளைகள் அல்லது இரத்த உறவுகளுக்காக மட்டுமே இதன் உரிமையினை மாற்ற முடியும். ஆனாலும் பலர் இவற்றை அடகு வைப்பதற்கும் , விற்பனை செய்வதற்கும் தயாராக இருப்பீர்கள்.
அவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றால் இந்த காணிகள் மீண்டும் அரச உடைமையாக மாறிவிடும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.
காணிகள் கிடைக்கப்பெறுவது இப்பிரதேசத்தில் மிக அரிதாக இருப்பதனால் இவற்றை பாதுகாப்பாக பேணுவது உங்கள் பொறுப்பாகும். புனர்வாழ்வு அமைச்சின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற பல உதவித்திட்டங்கள் காணி உரிமை இன்மை காரணமாக கை நழுவிய நிலையில் இங்கு பலர் உள்ளனர்.
இனிமேல் அவ்வாறான சூழ்நிலையொன்று உங்களுக்கு ஏற்படாது. இருக்கும், காணி உரிமை இல்லாமல் காணப்படுவது அகதி முகாம்களில் வாழ்வதற்கு ஒப்பானதே. இன்று இந்த அவலங்களுக்கு ஒரு விடிவு ஏற்பட்டுள்ளது எனவும் மா.தயாபரன் தெரிவித்தார்.
இதேவேளை இதுவரை காலமும் காணி இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 260 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.