அரச அதிபரின் செயற்பாட்டால் தமிழ் மக்கள் அதிருப்தி

101

இதுவரை காலமும் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் என குறிப்பிடப்பட்டு வந்த பதவிநிலைப்பெயர் தற்போது உதவி பிரதேச செயலாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபர்  டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் எழுத்துமூல உத்தரவின் பேரில் இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.

இது தொடர்பில் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட  இலங்கை நிருவாகசேவை அதிகாரி எஸ். ஜெகருபனிடம் கேட்டபோது, அவர் இதனை ஊர்ஜிதம் செய்தார். அம்பாறை அரசாங்க அதிபரின் செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது.

கடந்த ஒன்பது வருடகாலமாக இச்செயலகத்திற்குப் பொறுப்பாகவிருந்த  இலங்கை நிருவாக சேவை அதிகாரி கே. லவநாதன்  தனது பதவி நிலைப் பெயராக பிரதேச செயலாளர் என்றே பாவித்து வந்துள்ளார். அதற்கு முன்பிருந்தவர்களும் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த திடீர் மாற்றம் இடம்பெற்றுள்ளது.

தகவலறியும் சட்டத்தின் மூலம் இந்த மாற்றம் இடம்பெற்றதாக சொல்லப்படுகின்றது. இந்த மாற்றம் இடம்பெற்று இரு வாரகாலத்திற்கு மேலாகின்றபோதிலும் அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் சாதித்துவருவது குறித்து கல்முனைவாழ் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்திற்கு விழுந்த முதல் அடியாக இச்செயற்பாட்டைக் கருதமுடியும் என அரசியல்நோக்கர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

முதலிலே பதவிநிலைப் பெயரில் ஆரம்பித்து பின்னர் படிப்படியாக செயலகத்தின் ஒவ்வொரு நிருவாகச் செயற்பாடுகளிலும் தாவக்கூடிய துரதிஸ்ட நிலை தோன்றியுள்ளது. இதுவரை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் என்றிருந்த பெயர்ப்பலகை மற்றும் கடிதத்தலைப்பு இனி  உப பிரதேச செயலகம் என மாற்றம் பெறும் நிலை ஏற்படலாம் என பரவலாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

30 வருட யுத்தம் போன்று கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரமும் மாறிவிடுமோ என கல்முனைவாழ் தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர்.

SHARE