அரச கட்டிட நிர்மாணங்களிற்கு கடல் மணலைப் பயன்படுத்துவது தொடர்பாகக் கண்டறியுமாறு ஜனாதிபதி பணிப்பு

260

கட்டிடங்களை அமைக்கும் நடவடிக்கைகளுக்கு கடல் மணலைப் பயன்படுத்தும் தொழிநுட்பம் தொடர்பாக மேலும் ஆராய்ந்து அரச கட்டிட நிர்மாணத்திற்கு கடல் மணலைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்களின் மற்றுமொரு கட்டமாக இந்த நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உக்கிரமடைந்துள்ள சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இப்பணிப்புரையை விடுத்தார்.

கட்டிட நிர்மாண நடவடிக்கைகளுக்குத் தேவையான மரம் மற்றும் இயற்கை வளங்களுக்குப் பதிலாக சூழல் நட்புடைய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

திருகோணமலை மாவட்டத்தில் சூழல் அழிவுகள், வனசீவராசிகள் தொடர்பான பிரச்சினைகள், மணல் அகழ்வு, குப்பைகளை அகற்றுதல், சதுப்பு நிலங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குறித்த அமைச்சுகளின் ஒருங்கிணைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி பீ அபேகோன், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன ஆகியோர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

19.10.2016

maithrs-speech-on-14

SHARE