அரச நிறுவனங்களை தனியார்துறைக்கு விற்பனை செய்வது தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல – ஜனாதிபதி

272

அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களாக இருந்தால் அவற்றின் வருமானத்தை அதிகரித்து இலாபம் ஈட்டும் நிலைக்கு கொண்டுவருவதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுப்பதோடு, சில சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக தனியார் துறையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதேயன்றி ஒருபோதும் அந்த நிறுவனத்தை தனியார்துறைக்கு விற்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (10) முற்பகல் இடம்பெற்ற இலங்கைத் துறைமுக அதிகார சபையின் CFS 1 கப்பற்சரக்கு கொள்கலன்கள் செயற்பாட்டு மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேசிய பொருளாதாரத்தின் இதயமாக இருந்துவரும் கொழும்பு துறைமுகம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வழங்கும் உயர்ந்த பங்களிப்புகளை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, துறைமுகத்தை மென்மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் வழங்கவேண்டிய எல்லா பங்களிப்புகளையும் வழங்கும் எனத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகம் நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் அல்லாதபோதும் அதிலிருந்து கிடைக்கும் எல்லா வருமானங்களும் முழுமையாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடனை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை இதன் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒன்பது இலட்சம் கோடி கடன் சுமை இன்று நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தபோதும் எமது தேசிய தொழிற்துறையையும் ஏற்றுமதித் துறையையும் மேலும் முன்னேற்றி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை அதிகரித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களின் சேவைகளையும் இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, 2014 நவம்பர் 21ஆம் திகதி தாம் அப்போதைய அரசாங்கத்திலிருந்து விலகி பொது அபேட்சகராக ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றிய சந்தர்ப்பம் முதல் அவர் தம்மோடு இணைந்து நாட்டுக்குத் தேவையான புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறார் எனக் குறிப்பிட்டார்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் 37வது ஆண்டு நிறைவுடன் இணைந்ததாகவே மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த கப்பற்சரக்கு கொள்கலன்கள் செயற்பாட்டு மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை துறைமுக அதிகார சபை சேவை பங்களிப்புகளுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, 5400 சதுர மீற்றர் அளவுகொண்ட இந்த கப்பற்சரக்கு கொள்கலன்கள் செயற்பாட்டு மத்திய நிலையம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் வரவேற்கப்பட்டதுடன், ஜனாதிபதி அவர்கள் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து இந்த புதிய மத்திய நிலையத்தைத் திறந்துவைத்தார்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய இணையத்தளத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.

சிறுநீரக நோயாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்திற்கு ரூபா 25 இலட்சம் இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டதோடு, துறைமுகங்கள் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு விசேட நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம, துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க அவர்கள் உள்ளிட்ட பணிப்பாளர் சபை மற்றும் பணிக்குழாமினரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2016.08.10

President_maithripala_Sirisena

SHARE