பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு அரச மற்றும் தனியார் பேரூந்து நடத்துனர்கள் சாரதிகள் ஒத்துழைக்கவேண்டும் – வடக்கு போக்குவரத்து அமைச்சர்…
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை காலத்தில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வடக்கு மாகாணத்தின் சகல அரச மற்றும் தனியார் பேரூந்துகள் தமது சேவையினை செவ்வையாக வழங்கவேண்டும் என்று வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் போக்குவரத்து சீரின்மையால் பரீட்சை நிலையங்களுக்கு தாமதமாக வருவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், இந்த பொது பரீட்சை எமது மாகாணத்தின் எதிர்கால சமூகமான இன்றைய மாணவர்களின் முக்கியமான ஒரு பரீட்சையாக இருப்பதனால், இந்த விடயத்தில் அசட்டையில்லாது சகல பயணிகள் போக்குவரத்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என்றும், சகல அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளும் இதில் கூடிய கவனம் செலுத்துமாறும் அவர் பணித்துள்ளார்.