
தளபதி’ படம் வந்த பிறகு யார் அந்த அரவிந்த்சாமி என்று ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் ‘ரோஜா’ படம் வெளிவந்ததும் அரவிந்த்சாமியா என அதிசயிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவருக்கு ‘மறுபடியும், பாம்பே’ படங்கள் மட்டுமே பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. ‘அலைபாயுதே’ படத்திலும் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்தார். அதன் பின் தமிழ் சினிமாவை விட்டும், நடிப்பை விட்டும் ஒதுங்கினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தாலும் மீண்டும் அரவிந்த்சாமியைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. அவற்றில் இருந்து அவர் கவனமாகத் தேர்ந்தெடுத்த படம் ‘தனி ஒருவன்’. வில்லனாக நடித்திருந்தாலும் அவருடைய ஸ்டைலிஷான வில்லத்தனம் படத்திற்கே மிகப் பெரிய பிளஸ்பாயின்டாக அமைந்தது. ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஜெயம் ரவியுடன் ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
‘தனி ஒருவன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘துருவா’ படத்திலும் நடித்து வருகிறார். ஆனால், தெலுங்கில் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்தாலும், இயக்குனர் சொல்லும் எதையுமே அவர் கேட்பதில்லையாம், அவருடைய விருப்பத்திற்குத்தான் நடிக்கிறார் என படக்குழுவினர் வருத்தப்பட்டுள்ளார்கள். படத்தின் நாயகன் ராம்சரணும், சரி, அவர் விருப்பப்படியே நடிக்கவிடுங்கள், பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியதால் இயக்குனரும் அமைதியாகிவிட்டாராம்.
அரவிந்த்சாமியின் இந்த அலட்டல் அணுகுமுறை டோலிவுட்டிலிருந்து அப்படியே கோலிவுட் பக்கமும் வந்திருக்கிறது. அதனால், மற்ற இயக்குனர்கள் அரவிந்த்சாமி என்றாலே அலறுகிறார்களாம்.