அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து.இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா?

239

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளார்.

பிரேசில் நாட்டில் நடந்து வரும் விறுவிறுப்பான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு இதுவரை பதக்கம் கிடைக்காத நிலையில் தற்போது லீக் சுற்றில் ஹங்கேரியின் லாரா சரோசியையும், கனடாவின் மிச்செல் லீ-யையும் தோற்கடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய சிந்து, முதல் சுற்றில் சீனத் தைபேயின் டாய் சு யிங்கை வீழ்த்தி இன்று நடந்த காலிறுதிக்கு முன்னேறி களம் இறங்கினார்.

இந்நிலையில், இன்று காலை நடந்த காலிறுதியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் யிகானை எதிர்த்து போட்டியிட்ட சிந்து, முன்னணி வீராங்கனையின் சவாலை முறியடித்து முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் வென்றுள்ளார்.

இரண்டாவது செட்டில், ஒரு கட்டத்தில் 18-13 என்ற கணக்கில் முன்னிலை வகித்த சிந்து, வாங் தொடர்ச்சியாக 6 புள்ளிகளை பெற்றதால் பின்தங்கினார். பின்பு கடைசி நேரத்தில் நேர்த்தியாக செயல்பட்டு, அடுத்தடுத்து 3 புள்ளிகளைப் பெற்று முன்னிலைக்கு சென்று முடிவில் 22-20, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றியை தன்வசமாக்கி அரையிறுதியில் களமிறங்க உள்ளார்.

மேலும், ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவாலுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற‌ சிறப்பைப் பெற்றிருக்கும் சிந்து, ரியோவில் பதக்கம் வென்று தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு இந்திய ஒலிம்பிக் ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது.

SHARE