பெல்ஜியத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அர்ஜெண்டினா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு முறை பயணமாக கியூபா சென்றார். இந்த பயணத்தின் மூலம் கியூபா மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் நல்லுறவு ஏற்பட்டது. இதையடுத்து அர்ஜெண்டியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டார். அங்கு அரசு முறை விருந்து ஒன்றில் தனது மனைவியுடன் அவர் கலந்துகொண்டார். நூற்றுக்கணக்கான முக்கிய நபர்கள் கலந்து கொண்ட அந்த விருந்தில் டங்கோ நடனக்கலைஞர்கள் நடனம் ஆடினர். அப்போது நடன மங்கை ஒருவர் ஒபாமாவை தன்னுடம் நடனமாடும் படி கேட்டுக்கொண்டார். எனினும் அவரது அழைப்பை ஒபாமா நிராகரித்தார். ஒரு கட்டத்தில் ஒபாமா அப்பெண்ணுடன் இணைந்து டங்கோ நடனமாட தொடங்கினார். இதையடுத்து ஒபாமாவின் மனைவி மிச்சைல் தனது இருக்கையில் இருந்து எழுந்து அங்கிருந்த ஆண் டான்ஸருடன் சேர்ந்து நடனமாடினார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்தனர். எனினும் ஒபாமா நடனமாடியது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க குடியரசு கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் குறிப்பில், ஐ.எஸ். தீவிரவாதிகள் நமது நேச நாடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், ஆனால் ஒபாமாவோ நடனமாடிக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் ஒபாமாவின் இந்த செயலுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பிரஸெல்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 அமெரிக்கர்களும் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலையடுத்து உடனடியாக நாடு திரும்பும்படி பல்வேறு தரப்பினரும் ஒபாமாவை கேட்டுக்கொண்டனர். எனினும் அதனை ஒபாமா நிராகரித்துவிட்டு தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். முன்னதாக பிரஸெல்ஸ் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தபோது கியூபாவில் பேஸ்பால் விளையாட்டை ஒபாமா ரசித்து பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. |