அலட்சியத்துக்கு உரியதல்ல ஐ.நாவின் தீர்மானம்!

229

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது தென்னிலங்கை அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக அலட்சியப் போக்கையே வெளிக்காட்டி வருகின்றன.

போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கமானது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றிச் செயற்படுமா அல்லது அலட்சியப் போக்கைக் கடைப்பிடிக்குமா என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.

அரசு தனது நிலைப்பாட்டை இதுவரை உறுதியாகத் தெரிவிக்காத காரணத்தினால், ஐ.நா. தீர்மான விடயத்தில் நழுவல் போக்கையே கையாளுகிறது என்றுதான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதியானதும் சுயாதீனமானதுமான விசாரணையை நடத்த வேண்டுமென்ற எண்ணம் அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்பில் பெரும்பாலும் கிடையாது.

அவ்வாறிருக்கையில் இவ்விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டுமென்பதில் அரச தரப்புக்கு உடன்பாடு இல்லை. உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறை உயர்வானதாகவும் நம்பகரமானதாகவும் இருக்கையில், சர்வதேச பங்களிப்பானது அவசியமில்லையென்ற கருத்தையே அரசாங்க தரப்பிலுள்ள முக்கியஸ்தர்கள் இன்னமும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றும் விடயத்தில் அரசாங்கம் பெரும் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கின்றதெனக் கூறுவதே இங்கு பொருத்தம்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக நீதி விசாரணையொன்று ஆரம்பிக்கப்படுமானால், மனித உரிமை மீறல்கள் விடயத்தில் குற்றம் சுமத்தப்படுபவர்களில் அதிகமானோர் இராணுவ அதிகாரிகளாகவே இருப்பார்களென்பதில் சந்தேகம் கிடையாது.

அது மாத்திரமன்றி முன்னைய ஆட்சிக் காலத்தில் அதிகார மட்டத்தில் இருந்தோரில் பலரும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு இடமுண்டு.

இவ்வாறானதொரு சூழ்நிலையானது அரசாங்கத்துக்கு தென்னிலங்கையில் உகந்தது அல்ல.

இலங்கையின் பாதுகாப்புப் படையினரையும் சிங்கள மக்களையும் மைத்திரி – ரணில் அரசாங்கம் சர்வதேசத்துக்குக் காட்டிக் கொடுத்து விட்டதாக குற்றம் சுமத்துவதற்கு மஹிந்த ராஜபக்ச அணி மாத்திரமன்றி தென்னிலங்கையின் இனவாத, மதவாத அமைப்புகளும் காத்துக் கிடக்கின்றன.

பாதுகாப்புப் படையினர் மீது விசாரணை நடத்துவதென்பது சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப் போகின்ற தாக்கம் சாதாரணமாக இருக்கப் போவதில்லை.

அது மாத்திரமன்றி பாதுகாப்புப் படைக்குள்ளும் இவ்விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தவே செய்யும்.

சர்வதேசத்திடம் எமது படையினரைக் காட்டிக் கொடுப்பதற்கு இன்றைய அரசாங்கம் தயாராகி விட்டதாக தென்னிலங்கையில் சமீப தினங்களாக மஹிந்த அணியின் விசுவாசிகள் தரப்பிலிருந்து குரல்கள் ஒலித்து வருவதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தம்.

இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு மத்தியிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஸெய்ட் அல்– -ஹுசைன் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ஸெய்ட் அல்-ஹுசைனின் வருகைக்கு முன்னதாக கடந்த வருடத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக நிகழ்ந்த பரபரப்புகளையும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் இவ்விடத்தில் நினைவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் தனது நல்லிணக்க செயற்பாடுகளையும், பொறுப்புக் கூறும் கடப்பாடுகளையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவது முக்கியமாகும்.

அத்துடன், பொறுப்புக் கூறும் விடயத்தில் அரசாங்கம் தனது முன்னேற்றகரமான செயற்பாடுகளை இவ்வருடம் செப்டம்பர் மாதத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வாய்மூலமாக விளக்கமளிக்க வேண்டியுள்ளது.

அதேசமயம் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் இலங்கை அரசாங்கம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் வேண்டும்.

இவ்வாறான காலக்கெடுவை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் கொழும்பில் பல்வேறு உயர்மட்டங்களைச் சேர்ந்தோருடனும் பேச்சுகளை நடத்தி வருவதுடன் நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றும் விடயத்தில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைமைகளை நேரடியாக ஆராய்தல், அரசியல் தரப்புகளின் கருத்துகளைக் கேட்டறிதல் போன்றவை ஸெய்ட் அல்-ஹுசைனின் விஜயத்தின் நோக்கங்களாக இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

அதேசயம் ஐ.நா. தீர்மானத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு மறைமுக அழுத்தத்தைக் கொடுப்பதும் அவரது வருகையின் நோக்கமாக இருக்குமென இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

அல்-ஹுசைனின் வருகையை வைத்து இலங்கை விவகாரத்தை நோக்குகையில் சில யதார்த்தங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

இலங்கையின் அரசியல்வாதிகள் கருதுவது போன்று ஐ.நா. தீர்மானமானது அலட்சியப்படுத்தக் கூடியதோ அல்லது நிராகரிக்கப்படக் கூடியதோ அல்ல.

முன்னைய ஆட்சியாளர்கள் சிங்கள சமூகத்துக்குக் காண்பித்து வந்த ‘மாயவிம்பக் காட்சி’ நீண்ட காலத்துக்கு சாத்தியப்படப் போவதில்லை.

சர்வதேச நடைமுறைகளை உதாசீனப்படுத்துகின்ற ‘அரசியல் நடிப்பு’ சிங்கள மக்கள் மத்தியில் ஜனரஞ்சமாக அமையக் கூடும்.

ஆனால் ஐ.நா. தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செல்வதைத் தடுக்க முடியாது.

அல்-ஹுசைனின் இப்போதைய வருகை அதனையே உணர்த்துகிறது.

un_logo_1

SHARE