இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெஸ்டர் குக்கை, 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்புவதே சிறப்பாக இருக்கும் என அந்த அணித்தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவலில் தொடங்க உள்ளது.
இங்கிலாந்து ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ள நிலையில், கடைசி போட்டியையும் வெல்லும் முனைப்புடன் உள்ளது. மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் அலெஸ்டர் குக் இந்த டெஸ்டுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், அலெஸ்டர் குக்கை 4-1 என்ற கணக்கில் வழியனுப்புவதே சிறப்பாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த வாரம் எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான வாரமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக நிறைய போட்டிகளில் விளையாடிய வீரர் ஓய்வு பெறுவது எங்களுக்கு பெரிய இழப்பாகும்.
ஓய்வு பெறும் அலெஸ்டர் குக்கை 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்ப முடிவு செய்துள்ளோம். அதையே இலக்காக கொண்டு இந்த போட்டியில் விளையாட உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

