ஈழத்துப்பாடகர் எஸ்.ஜி.சாந்தனுக்கான வணக்க நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் வசந்தனின் தலைமையில் அவுஸ்திரேலியாவில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வு மெல்பேர்ண் நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை Vermont South Community House மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் எஸ்.ஜி.சாந்தனின் திருவுருவப்படத்திற்கு மெல்பேர்ணில் மிக நீண்ட காலமாக இசைத்துறையோடு பயணித்துக் கொண்டிருக்கின்ற செல்லையா சீவராசா ஈகைச் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் மலர்வணக்கம் செலுத்தியதுடன், மலர்வணக்கத்தைத் அகவணக்கமும், அகவணக்கத்தையடுத்து வசந்தன் தலைமையுரையை நிகழ்த்தினார்.
இதேவேளை சிட்னியில் துங்காபி சனசமூக நிலையத்திலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வணக்க நிகழ்வுகள் தொடங்கின.
அகவணக்கத்துடன் நிகழ்வினை ஆரம்பித்து சாந்தனின் நினைவுப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தேசிய விடுதலைக்கான பணியில் பாடகர் சாந்தனுடன் இணைந்து பணியாற்றிய அபரன், சாந்தனின் எண்ணங்களையும், கனவுகளையும் பகிர்ந்து நினைவுரை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.