ஆசிரியர் போராட்டத்திற்கு மலையக ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு 

172

நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன் 

கல்விச்சேவைக்கு அரசியல் பழிவாங்கும் போர்வையில் கல்வி அமைச்சினால் நியமனம்  வழங்குவதை எதிர்த்து இடம்பெறவுள்ள  வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக மலையக பெருந்தோட்ட ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

அரசியல் பழிவாங்கும் போர்வையில் வழங்கப்படும் நியமனம்  தொடர்பில் எதிர்வரும் 26 ம் திகதி  ஆசிரிய தொழிற்சங்கங்களினால்  மேற்கொள்ளவுள்ள சுகயீன விடுமுறை வேலை நிறுத்த போராடத்திற்கு  பெருந்தோட்ட ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஆதரளிப்பது  தொடர்பில்  23.07.2018 ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
இதன்போது நுவரெலியா மாவட்ட அனைத்து ஆசிரியர்  தொழிற்சங்கங்களும் பங்கு கொண்டு தமது ஆதரவை வழங்குவதாக இலங்கை கல்விச் சமூக சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.சங்கரமணிவன்னன் கருத்து தெரிவிக்கையில், சேவைப் பிரமாணக் குறிப்புகளை மீறி கல்வி நிர்வாக சேவைக்கும், அசிரியர் கல்வியியலாளர் சேவைக்கும், அதிபர் சேவைக்கும் 1014 பேருக்கு நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நியமனம் பெறுவோரின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் அடிப்படை தகைமை அல்லாதோர் கா.பொ.த சா/தரத்தில் கணித பாடத்தில் சித்தியடையாதோர், அதிபர் சேவை நிர்வாக சேவை போட்டி பரிட்சையில் சித்தியடையாதோர் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டோரும் பெயர் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
எனவே இந்த முறையற்ற நியமனத்தை நிறுத்தக்கோரி எதிர்வரும் 26 ம் திகதி  நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள சுகயீன விடுகை போராட்டத்திற்கு தாம் ஆதரவளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பின் போது  இலங்கை கல்விச்சமூக சம்மேளனம், மலையக ஆசிரியர் முன்னணி,  ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கை ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம்,  இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம் என்பனவும் கலந்துகொண்டனர்.
SHARE