இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருவதால், சுப காரியங்கள் செய்யலாமா என்ற குழப்பம் மக்களிடம் நிலவி வருகிறது.
‘ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தா, நல்ல வழி பிறக்கும்’ என நம்ம ஊர்களில் ஒரு சொலவடை உண்டு. ஆனால், இந்த ஆண்டு ஆவணி பிறந்த பிறகும், தமிழ்நாட்டில் பல ஊர்களில் வியாபாரம் பெரிதாக நடைபெறாமல், ஒரு மந்த நிலையே நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருவதுதான் இந்தத் தேக்க நிலைக்குக் காரணம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மாதம் திருமணங்கள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடப்பதுகூட, பரவலாகக் குறைந்துவிட்டதாம்.
ஆவணி 1-ம் தேதியும், 30-ம் தேதியும் பௌர்ணமி தினங்களாக அமைந்துள்ளன. இதனால், வர்த்தகம் – குறிப்பாக பட்டுச்சேலை, மளிகை, காய்கறிகள், மலர்கள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறுகிறார்கள்.
வைகாசி, ஆவணி, தை, மாசி ஆகிய நான்கு மாதங்களில்தான் அதிக அளவில் திருமணங்கள் நடக்கும். ஆனால், இம்முறை ஆவணியில் இரண்டு பௌர்ணமிகள் வருவதால், பெரும்பாலான திருமண நிகழ்வுகள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதுபற்றி ஜோதிடர் கூறுகையில், ”இரண்டு அமாவாசைகள், இரண்டு பௌர்ணமிகள் ஒரே மாதத்தில் வந்தால், அந்த மாதத்தை ‘மல மாதம்’ என்று அழைக்கிறோம். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, இந்த ஆண்டு இரண்டு பௌர்ணமிகள் வந்துள்ளன. காஞ்சி மடம், வித்வத் சபை ஆகிய சபைகள் கூடிப் பேசி, இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நிகழ்த்த வேண்டாமென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், குரு அஸ்தமனம், சுக்ர அஸ்தமனம் நிகழும் காலங்களிலும் சுப காரியங்களை விலக்க வேண்டும். சுக்ரனும் சூரியனும் ஒரே வீட்டில் இருப்பதை ‘சுக்ர அஸ்தமனம்’ எனவும், சூரியனும் குருவும் ஒரே வீட்டில் இருப்பதை ‘குரு அஸ்தமனம்’ என்றும் சொல்வார்கள். இதை அஸ்தங்கம், அஸ்தங்கரம், மற்றும் அஸ்தமனம் என்று அழைப்பார்கள். ஜோதிடரீதியாக சூரியனும் குருவும் சிலநாட்கள் ஒரே வீட்டில் இருந்து குறிப்பிட்ட பாகையில் விலகிவிடுவார்கள். இந்த நாட்களிலும் சுபகாரியங்களை விலக்குவது நல்லது.
அப்படியென்றால், எந்த ஒரு சுப நிகழ்ச்சியையுமே இந்த ஆவணியில் நடத்தக்கூடாதா?
“சீமந்த வைபவத்தை 7-வது மாதத்திலோ, 9-வது மாதத்திலோ நடத்துவார்கள். அதைத் தள்ளி வைக்க முடியாது. தள்ளிப்போடவும் வேண்டியதில்லை. தாராளமாகச் செய்யலாம். அதேபோல், மஞ்சள் நீராட்டு விழா, முடிகாணிக்கை செய்து காது குத்துவது போன்ற சுப நிகழ்ச்சிகளைச் செய்யலாம். திருமணம் தவிர்த்து, மற்ற சுபகாரியங்களை நிகழ்த்தலாம். அதற்குத் தடையில்லை” என்கிறார் சந்திரசேகர பாரதி.