முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஒன்றை உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பதற்காக முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் சென்றுள்ளார்.
ஜனாதிபதி அவர்கள் குறித்த நிகழ்வு முடிவடைந்ததும் கொழும்பு திரும்புவார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு வருவதையிட்டு நேற்று மாலையில் இருந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களுக்கு மறுப்பு
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள கைத்ராமணி ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை சென்றுள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்விற்கு வருகை தந்த வட மாகாண ஊடகவியலாளர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பாடசாலை அதிபர்கள் முக்கியஸ்தர்கள் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் திடீர் விஜயத்தால் ஐயம்!
எந்த ஒரு முன்னறிவித்தலுமின்றி திடீரென முல்லைத்தீவிற்கு விஜயம் மெற்கொண்டுள்ள ஜனாதிபதியின் இந்தப் பயணம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதற்காண காரணம் சுமூகமான இக்காலப்பகுதியில் பலத்த பாதுகாப்புக்களுடன் ஜனாதிபதி வருகை தந்தது மட்டுமல்லாது, பொதுமக்களையோ, ஊடகவியலாளர்களையோ மற்றும் பலரை அனுமதிக்காமை குறித்து ஐயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாத நடுப்பகுதியில் யாழ் மாவட்ட அரசியல் பிரமுகர் ஒருவர் ஜனாதிபதிக்கு வடக்கில் உயிராபத்து உள்ளதாக கூறியுள்ள சுழ்நிலையில், ஜனாதிபதியின் வடக்கு பயணங்களில் மிகவும் இரகசியத் தன்மையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.