ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்பு! கடற்படை உத்தியோகத்தர்கள் விரைவில் கைது

293
ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் கடற்படை உத்தியோகத்தர்கள் சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கடந்த 12ம் திகதி கொழும்பு கோட்டே நீதிமன்றில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

இதன் போது, சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர், கோட்டே நீதவான் பிரியந்த லியனகேவிடம் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வுப் பிரிவின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைத்தவுடன் கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வான் வண்டி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கடத்தல்கள் தொடர்பில் அப்போதைய கடற்படைத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிந்திருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது இவ்வாறான அறிக்கைகளை புலனாய்வுப் பிரிவினர் சமர்ப்பிக்கின்ற போதிலும் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில கைதாகவில்லை என சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதவான் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி இந்த வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

SHARE