ஆட்டோ ஓட்டும் முன்னாள் ஒலிம்பியன்

178

ஒலிம்பிக் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக சைக்கிளிங் பிரிவில் பங்கேற்ற முன்னாள் ஒலிம்பியன் ஒருவர், தற்போது லாகூரில் ஆட்டோ ஓட்டும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

முகமது ஆஷிக் (81) என்ற அந்த முன்னாள் வீரர், 1960 ரோம் ஒலிம்பிக் மற்றும் 1964 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பாகிஸ்தான் சார்பில் கலந்து கொண்டவர். அந்தப் போட்டிகளில் பதக்கங்கள் ஏதும் வெல்லாத போதிலும், ஒரு தேசிய நாயகனாக அவர் அப்போது புகழப்பட்டார்.

அத்தகைய நபர் இன்று, ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 450 சதுர அடி கொண்ட வீட்டில் வாழும் முகமது, அந்த வீட்டின் மீது சுமார் ரூ.6.3 லட்சம் கடனும் வாங்கி வைத்திருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள ஆஷிக், தனது நினைவுகள் மற்றும் நிலைமை குறித்து பகிர்ந்து கொண்டதாவது:

ஒரு குத்துச்சண்டை வீரனாக, தேசிய அளவில் ஜொலித்து வந்தேன். அதில் நான் அடைந்த காயங்களை கண்டு வருந்திய என் மனைவி வற்புறுத்தியதை அடுத்து சைக்கிளிங் போட்டிகளில் 1950-களில் பங்கேற்கத் தொடங்கினேன்.

அன்றைய மதிப்பில் ரூ.20-க்கு சைக்கிள் வாங்கி போட்டிகளில் பங்கேற்றேன். அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். பாகிஸ்தானுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதை எனது அதிர்ஷ்டமாக கருதினேன். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றபோது பாகிஸ்தான் பிரதமர்கள், அதிபர்கள், உயரதிகாரிகளுடன் கை குலுக்கிய சம்பவங்களை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். பாகிஸ்தான் ரயில்வேயில் ஒப்பந்த ஊழியனாக பணியாற்றியபோது, தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் ரயில்வே சார்பில் வெற்றியும் பெற்றேன்.

ஒருமுறை, சைக்கிள் போட்டியில் தனது உறவினர் பங்கேற்க இருப்பதாகவும், அவருக்கு வெற்றியை விட்டுத்தருமாறும் எனது மேலாளர் வற்புறுத்தினார். அதற்கு நான் மறுத்ததை அடுத்து எனது பணி பறிக்கப்பட்டது.

இருப்பினும், மனம் தளராமல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்தேன். வருமானத்துக்காக பல்வேறு சிறுதொழில்களில் ஈடுபட்டு, கடந்த 6 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன். எனது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். எனினும் அவர்களை சார்ந்து வாழ நான் விரும்பவில்லை. பெரும்பாலான மக்கள் நான் உயிரிழந்துவிட்டதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஏன், எப்படி என்னை மறந்தார்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

எனது நிலை குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்ததுடன், பல்வேறு கடிதங்களும் எழுதினேன். இதுவரை எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை என்றார். தனது ஆட்டோவில் தான் வாங்கிய பதக்கங்கள், பிரதமர் நவாஸ் ஷெரீஃபிடம் விருது வாங்குவது போன்ற புகைப்படங்களை வைத்துள்ளார் ஆஷிக்.

அத்துடன், “தங்களது நாயகனை மறக்கும் நாடும், மாநிலமும் வளமாக இருக்க முடியாது’ என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் கால்வின் கூலிட்ஜின் வாசகத்தையும் எழுதி வைத்துள்ளார்.

 mohammad

SHARE