காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவும் சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1989ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு சாட்சியம் வழங்கப்பட்டது.
கடையை கொளுத்திவிட்டு தன்னுடைய இரு பிள்ளைகளையும் இந்திய இராணுவம் கடத்திச் சென்றதாகவும் அன்று முதல் தனது பிள்ளைகள் இருவரும் காணாமல் போனதாகவும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த தாய் சாட்சியம் வழங்கினார்.
1989இல் யாழ் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டை மூண்டபோது வல்வெட்டித்துறைச் சந்தியில் கடை வைத்திருந்த தன்னுடைய மகன்களையே இந்திய இராணுவத்தினர் கடத்திச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்கள் கடையை தீமூட்டி எரித்துவிட்டே மகன்களை கடத்தியதாக தெரிவித்த தாயார் தமது பிள்ளையை இந்திய இராணுவத்திடம் தேடிச்சென்று கேட்டபோது அப்படி எவரும் இல்லை என்று கைவிரித்தாகவும் கூறினார். ஆனால் தனது மகனை இந்திய இராணுவம் கொண்டு சென்றபோது அருகில் இருந்த கடைக்காரர்கள் சாட்சிகளாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
எனவே இந்திய இராணுவத்தால் கடத்தப்பட்ட தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு அந்தத் தாயார் மிகவும் உருக்கமாக தனது சாட்சியத்தை கண்ணீருடுன் பதிவு செய்த சம்பவம் அங்கிருந்த பலரையும் நெகிழச்செய்தது.