ஆதாரங்களை வழங்க நாங்கள் தயார்! அதை தடுத்து நிறுத்த அவர் தயாரா?

273

பௌத்தர்களே இல்லாத முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பான ஆதாரங்களை வட மாகாண ஆளுநருக்கு வழங்க நாங்கள் தயார். ஆனால் அதை தடுத்து நிறுத்த அவர் தயாரா? என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குறே பேசினார்.

இந்த சந்திப்பின் போது குறித்த விகாரை அமைப்பு தொடர்பில் ஆளுநரிடம் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஆளுநர் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனத் குறிப்பிட்டு நழுவினார்.

இந்த நிலையில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரவிகரன்,

விகாரை அமைப்பு தொடர்பில் ஆதாரங்களுடன் ஆளுநருக்கு தகவல்களை வழங்க தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

3 தமிழ்க் குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்கள், ஒரு பிரதேச சபைக்குரிய வீதி, கொக்கிளாய் ஆதார வைத்தியசாலைக்குரிய ஒரு பகுதி நிலம் ஆகியவற்றை பலாத்காரமாக  ஆக்கிரமித்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அந்த இடத்தில் விகாரை ஒன்றை பெரும் எடுப்பில் அமைத்து வருகின்றார்.

இது தொடர்பாக நில உரிமையாளர்கள் பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டபோதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நல்லாட்சி அரசு எனக் கூறப்படும் இந்த அரசில் இவ்வாறு ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து வருகின்றன எனவும் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்படும் விகாரை தொடர்பில் வட மாகாண சபையில் பேசப்பட்டுள்ளது.

முதலமைச்சரும் இந்த விகாரை அமைப்புப் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். இதன் பின்னரும் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என ஆளுநர் கூறியிருக்கின்றார்.

புதிதாக கடமையேற்றுள்ளதால் இந்த விடயம் சில வேளைகளில் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் விகாரை அமைப்பு தொடர்பில் ஆதாரங்களுடன் தகவல்களை ஆளுநருக்கு வழங்க நாம் தயாராக இருக்கிறோம்.

அவ்வாறு வழங்கினால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார்? என்பதைக் கூற வேண்டும் எனவும் ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் மக்களுக்கிடையே விரிசல் நிலையே அதிகரிக்கும் என்பதை ஆளுநர் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE