ஆனந்தசுதாகரனுக்காக மூன்று இலட்சம் கையெழுத்துகளை ஜனாதிபதியிடம் கையளித்த வடக்கு கல்வி அமைச்சர்

211

ஆனந்தசுதாகரனை விடுவிக்க கோரி 3 இலட்சம் கையெழுத்துக்களை வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

தாயை இழந்ததாலும், தந்தை சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, உறவினரின் அனுசரணையில் வாழும் இரு சிறுவர்களின் நலன் கருதி அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் விடுவிக்கப்பட வேண்டுமென ஏராளமான கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து ஆனந்தசுதாகரன் கடந்த தமிழ், சிங்கள புத்தாண்டின் போது விடுவிக்கப்படுவார் என்ற செய்தி ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அவரது விடுதலையை உத்தரவாதப்படுத்த மேலும் வலியுறுத்தல்கள் தேவை என்ற அடிப்படையில் வட மாகாண கல்வி சமூகத்திடமிருந்து இருந்து 3 இலட்சம் கையொப்பங்களைப் பெற்று ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கும்படி வட மாகாணக் கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.

இதனை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கும் பொருட்டு, அதற்கான நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் நினைவூட்டல்கள் அனுப்பிய போதும் அது கைகூடவில்லை.

எனினும், நேற்றயதினம் 18ஆம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருகை தர இருப்பதால் இங்கு வைத்து மூன்று இலட்சம் கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய மனுக்களைக் கையளிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் வட மாகாண ஆளுநரின் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையிலேயே கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து 3 இலட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சரினதும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினரதும் கோரிக்கை கடிதங்களுடன் கூடிய மனு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி இவ்விடயத்தில் தான் அக்கறையுடனேயே இருப்பதாகவும், அதனை நோக்கி தாம் செயற்பட்டு வருவதாகவும் வடமாகாணக் கல்வி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

SHARE