
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக் கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மும்பையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு கடந்த 13-ந்தேதி இமயமலைக்கு புறப்பட்டார். பெரும் பாலும் குடும்பத்தினரை தவிர்த்து தனியாகவே செல்ல விரும்பும் ரஜினிகாந்த் இந்த முறை மூத்த மகள் ஐஸ்வர்யா தனுசையும் உடன் அழைத்துச் சென்றார்.
சென்னையில் இருந்து விமானத்தில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்ற அவர், அங்கிருந்து காரில் ரிஷிகேஷ் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து, கங்கா ஆரத்தியிலும் கலந்துகொண்டார். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கி, சுவாமி களின் சமாதியில் தியானம் செய்தார். தொடர்ந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் சென்று, தரிசனம் செய்தார்.
ஒவ்வொரு முறை படப்பிடிப்புக்குப் பிறகும் வெளிநாடு அல்லது இமயமலை பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். இந்த முறை ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்த பிறகு, லண்டன் செல்லவே முதலில் திட்டமிட்டிருந்தார். அதற்கான விமான டிக்கெட்டும் பெறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு, இமயமலை செல்ல முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று பாபாஜி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு தியானம், வழிபாடு மேற்கொண்ட பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். உத்தரகாண்டிலேயே நேற்று இரவு தங்கிய ரஜினி, தனது 5 நாள் இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று சென்னை திரும்புகிறார். விரைவில், ‘தர்பார்’ படத்தின் டப்பிங் வேலைகள் மற்றும் சிவா இயக்க உள்ள புதிய படத்தில் அவர் கவனம் செலுத்த உள்ளார்.
இமயமலையில், ரசிகர்களுடன் அவர் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இமயமலையிலுள்ள பாபா ஆசிரமத்தில் உள்ள கடையில், புத்தகம் வாங்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அவரது ரசிகர்கள் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.