ஆபாச திரைப்பட தயாரிப்பில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபாச காட்சிகள் உள்ளடங்கிய திரைப்படமொன்றை தயாரிப்பதற்கு பங்களிப்புச் செய்த தொலைக்காட்சி நாடக இயக்குனர், நடிகர், துணை நடிகர் மற்றும் நடிகை ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஆபாச காட்சிகள் அடங்கிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கப் பங்களிப்பு வழங்கியதாக குறித்த நபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த அத்தனகல்ல நீதவான் தினேஸ் லக்மால் பெரேரா, அந்த தண்டனையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்துள்ளார்.
தொலைக்காட்சி நாடக இயக்குனர் சுமித் குமார, ஐ.பி. பிரியந்த குமார, ரத்னகுமாரி சர்மிளா மற்றும் திவங்க லக்ஸ்மன் ஆகியோரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
சுமித் குமார மற்றும் திவங்க ஆகியோருக்கு தலா 5000 ரூபா அபராதமும் ஏனைய இருவருக்கும் தலா 2500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் மிகவும் இழிவான ஓர் காரியத்தை செய்துள்ளதாகவும் இதனால் கலை வளர்கின்றதோ இல்லையோ இளைய தலைமுறையினர் சீரழிக்கப்படுவர் என கடந்த வெள்ளிக்கிழமை இந்த தண்டனையை வழங்கிய நீதவான் தினேஸ் லக்மால் பெரேரா தெரிவித்துள்ளார்.