பொருளாதார ரீதியில் நெருக்கடியில் இருக்கும் எமக்கு 730 ரூபாய் சம்பளவுயர்வு போதாது, ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் எனக் கோரி டிக்கோயாவில் 18.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 11 மணியளவில் தொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு பேச்சுவார்த்தை 18 மாத காலமாக இழுபறியில் இருந்து வந்த நிலையில் இன்று முதலாளிமார் சம்மேளனமும், கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களும் 730 ரூபாய் அடிப்படைச் சம்பளத்திற்கு கைச்சாத்திடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் டிக்கோயா தரவலை பிரதேசத்தைச் சேர்ந்த 7 தோட்டங்களைக் கொண்ட தொழிலாளர்கள் தரவலையிலிருந்து ஊர்வலமாக டிக்கோயா நகருக்கு பதாதைகள் ஏந்தியவாறு டிக்கோயா சந்தியினூடாக அட்டன் பிதான பாதையின் பெருந்தோட்ட கலனிவெளி கம்பனியின் காரியாலயம் வரை பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்டகாலமாக இழுபறி நிலையிலிருந்த சம்பளப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டாத நிலையில் ஆயிரம் ரூபாய் சம்பளம் கோரி மலையகம் தழுவிய போராட்டத்தைத் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் வகையில் கொழும்பு, யாழ், வவுனியா, மட்டக்களப்பு என நாடு தழுவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றது. இவற்றோடு யாழ் பல்கலை மாணவர்களும், பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்களும் ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் இன்று கொழும்பில் சம்பள. உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிகின்ற நிலையில் பொருளாதார நெருக்கடியில் வாழும் எமக்கு 730 ரூபாய் போதாது ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் இணங்கவேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டபின் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்