ஆயுர்வேதத்தின்படி தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதால் உண்டாகும் பலன்கள் ஏராளம். தலைமுடி அடர்த்தியாக, மென்மையாக பளபளப்பாக வளர உதவுகிறது. உணர்வு உறுப்புகளை மிருதுவாக்கி, அதன் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. முகத்தில் தோன்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.உச்சந்தலையில் மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களைப் பெற, அதனைச் சரியான முறையில் சரியான நேரத்தில் செய்ய வேண்டும்.
முடி வளர்ச்சி, குறைந்த நுனி முடி வெடிப்புகள், மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தல், இளநரை போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது, போன்ற அறிகுறிகள், உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்துகிறது.
இரவு உறங்கச் செல்வதற்கு முன் தலை முழுவதும் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வது சிறந்த பலன்களை தரும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
மசாஜ் செய்தவுடன், இரவு முழுதும் அப்படியே விட்டு விட்டு, பின் மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். தினமும் தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக நீண்ட கூந்தல் உள்ளவர்கள், தினமும் தலைக்கு குளிக்க வேண்டாம். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்கலாம்.
முடி வளர்ச்சிக்கு, உச்சந்தலை, வேர்க்கால்கள் மற்றும் முடியின் முழு நீளத்திற்கும் எண்ணெய் தடவ வேண்டும். எண்ணெய் தேய்ப்பதற்கு முன், அதனை சிறிதளவு சூடு செய்து பின் தடவலாம். தொடர்ச்சியாக தலைவலியால் அவதிப்படுகிறவர்கள், ஆயுர்வேத எண்ணெய்யைத் தெரிவு செய்யலாம். மாலை 6 மணியளவில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் தலைவலி குறைகிறது.
தலைவலி வாதத்துடன் தொடர்பு கொண்ட ஒரு வலியாகும். ஒரு நாளின் மாலைப் பொழுதின் இந்த நேரம், வாதத்திற்கான நேரமாகும். ஆகவே இந்த நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்ப்பதால், உங்கள் தலைவலி நிச்சயமாகக் குறையும்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன் அரை மணிநேரம் மென்மையாக தலையை மசாஜ் செய்வதால் இரவில் சிறந்த உறக்கத்தைப் பெறலாம். இந்த மசாஜிற்கு நல்லெண்ணெய்யை பயன்படுத்துவதால் சிறந்த தீர்வுகள் கிடைக்கும். தலை வழுக்கை, இளநரை, தலைவலி போன்றவற்றை இல்லாமல் செய்ய ஆயர்வேதம் நல்லெண்ணெய்யை பரிந்துரைக்கிறது.
நல்லெண்ணெய்க்கு மாற்றாக தேங்காய் எண்ணெய்யைக் கூட பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யை தலையில் தடவுவதற்கு முன், சிறிதளவு சூடாக்கி பின் உச்சந்தலை மற்றும் உங்கள் கூந்தலில் தடவலாம். இப்படி செய்வதால் சைனஸ் மற்றும் சளி தொடர்பான பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கின்றன.