இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜெக் லீச், மொயீன் அலி, ஆடில் ரஷித் ஆகியோர் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றி இலங்கை மண்ணில் சாதித்து காட்டியது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் வழக்கமாக வேகப்பந்து வீச்சில் அசத்தும் இங்கிலாந்து வீரர்கள், இந்த முறை சுழற்பந்தில் அற்புதமாக பந்து வீசி இலங்கை அணியை மிரட்டினர் என்றே கூறலாம்.
இப்போட்டியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஜொக் லீச் 8 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 6 விக்கெட்டுக்களையும், ஆடில் ரஷித் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
அதே போன்று முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி 8 விக்கெட்டுக்களையும், ஜெக் லீக் மற்றும் ஆடில் ரஷித் ஆகியோர் முறையே 5, 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளின் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தம் 38 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றியிருந்தனர்.
141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய போட்டியாக இது ஆகும்.
இதற்கு முன்பு 1969-ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் 37 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்த்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.