இங்கிலாந்தை திணறடித்த பெல்ஜியம்

105

இங்கிலாந்துக்கு எதிராக காலினிங்க்ராட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் 1 க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெல்ஜியம் 100 வீத வெற்றி பெறுபேறுடன் ஜீ குழுவில் முதலாம் இடத்தைப்பெற்றது.

இப் போட்டிக்கு முன்பதாகவே இரண்டு அணிகளும் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்த நிலையில் இரண்டு அணிகளிலும் நேற்றைய போட்டியில் பெரு மாற்றங்கள் செய்யப்பட்டன.

இங்கிலாந்து பயிற்றுநர் கெரத் சௌத்கேட் தனது அணியில் எட்டு மாற்றங்களையும் பெல்ஜியம் பயிற்றுநர் ரொபர்ட்டோ மார்ட்டினெஸ் தனது அணியில் ஒன்பது மாற்றங்களையும் செய்திருந்தனர். இங்கிலாந்தின் வழமையான அணித் தலைவர் ஹெரி கேனுக்கும் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இரண்டு அணிகளிலும் வழமையாகக் காணப்படும் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் பெரிதாகக் காணப்படவில்லை. பல வீரர்களால் முழுமையான ஆற்றல்களை வெளிப்படுத்த முடியாமல் போனது. ஆனாலும் அவ்வப்போது இரண்டு அணயினரும் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தினர். அவை இலக்கை அடையவில்லை.

இடைவேளையின் பின்னர் 51 ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் அத்னான் ஜானுசாஜ் தனது இடது காலால் உதைத்த பந்து வளைவாக சென்று இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டான் பிக்போர்டுக்கு மேலாக கோலினுள் புகுந்தது.

இந்த கோல் போடப்பட்டு சிறிது நேரத்தில் கோல் நிலையை சமப்படுத்தும் வாய்ப்பு ஒன்று இங்கிலாந்துக்கு கிடைத்தது. மார்க்கஸ் ரஷ்போர்ட் கோல் போட எடுத்த முயற்சியை பெல்ஜியம் கோல்காப்பாளர் திபோட் கோர்ட்டொய்ஸ் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தடுத்து நிறுத்தினார்.

இந்தப் போட்டி முடிவானது இங்கிலாந்துக்கு முதலாவது தோல்வியைக் கொடுத்ததுடன் குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்றதால் நொக் அவுட் சுற்றில் கொலம்பியாவை எதிர்த்தாடவுள்ளது.

நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ள ஒரே ஒரு ஆசிய நாடான ஜப்பானை பெல்ஜியம் சந்திக்கவுள்ளது.

 

SHARE