
உடலில் இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான் மற்ற உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படும். அப்படிப்பட்ட முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சில உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் இதய நோய் வருவதை தடுக்க முடியும்.
சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்தம் உறைவதைத் தடுத்து, சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். மேலும் இது இதய நோய்க்கு வழிவகுக்கும் ட்ரைக்ளிசரைடுகள் என்னும் ஒருவகை கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும்.
வால்நட்ஸ்
ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், இதய நோயின் அபாயத்தை பாதியாக குறைக்கலாம். வால்நட்ஸில் நல்ல கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளதால் அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.
கொழுப்பு இல்லாத பால் அல்லது தயிர்
பால் பொருட்களில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். பால் அல்லது பால் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். ஆகவே இதயம் ஆரோக்கியமாக இருக்க இதை சாப்பிடலாம்.
தக்காளி
தக்காளியில் உள்ள லைகோபைன், வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவை இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமான சத்துக்களாகும். இது இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.
உப்பில்லாத பாதாம் வெண்ணெய்
நட்ஸ் வெண்ணெய்களில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. எனவே எப்போதும் நட்ஸ் வெண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அவை உப்பு இல்லாததாகப் பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இது இதயத்தை பலமாக்கும்.
அவகேடோ
அவகேடோ பழத்தில் கொழுப்புக்கள் அதிகம் இருந்தாலும், அதில் மோனோஅன்சாச்சுரேட்டட் என்னும் நல்ல கொழுப்பு தான் அதிகளவு நிறைந்துள்ளது. இது உடலினுள் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
சொக்லேட்
கொக்கோ என்னும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டில், ப்ளேலோனால்கள் அதிகம் உள்ளதால் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தம் உறைவதைத் தடுக்கவும் உதவுகிறது. அதிலும் டார்க் சாக்லேட்டில் தான் அதிகளவு ப்ளேவோனால்கள் உள்ளது.
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை மற்றும் இதர பருப்பு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். கொண்டைக்கடலையில் மட்டுமின்றி, கத்திரிக்காய், வெண்டைக்காய், ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றிலும் நார்ச்சத்து உள்ளது, இது நமது இதயத்தை பாதுகாக்கும்.