ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைக் குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயலெனவும், இவ்வாறான தலைவர்கள் இலகுவில் உருவாக மாட்டார்களெனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றுக்கொண்டிருக்கும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் வந்த ஜனாதிபதிகள் தங்களது அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்களே தவிர, அதிகாரத்தை குறைத்துக்கொள்ள யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் குறித்த திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில், இன்று மாலை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சருடனான சந்திப்பில் கவனம் செலுத்தப்படுமென அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.