பிளாஸ்டிக்கில் காணப்படும் பால்நிலை மாற்றத்திற்கு வித்திடுவதும் இனவிருத்தி ஆற்றலைப் பாதிப்பதும் மார்பு மற்றும் விதைப்பை புற்றுநோய்க்கு காரணமானதுமான இரசாயனம் 86 சதவீத இளவயதினரின் உடலில் இருப்பது புதிய பிரித்தானிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
1960 களிலிருந்து குறிப்பிட்ட பிளாஸ்டிக்கை உருவாக்கப் பயன்படும் பைபீனோல் ஏ (பி.பி.ஏ.) என்ற மேற்படி இரசாயனம் தண்ணீர் போத்தல்களிலும் பிளாஸ்டிக் கொள்கலன்களிலும் உணவுப் பொருட்களை அடைக்கப் பயன்படும் தகர கொள்கலன்களுக்குள்ளும் உணவு பரிமாறப்படும் பிளாஸ்டிக் தட்டுகளிலும் பிளாஸ்டிக் கிண்ணங்களிலும் பொதுவாகக் காணப்படுகிறது.
பெண்களின் பாலியல் ஹோர்மோனான ஈஸ்ட்ரோஜென்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படும் இந்த இரசாயனம் ஆண்களில் விந்தணுக்கள் குறைவது மற்றும் இனவிருத்தி ஆற்றல் இழப்பது என்பனவற்றை ஏற்படுத்துவதுடன் விதைப்பை புற்றுநோய்க்கும் காரணமாகிறது. அதேசமயம் மேற்படி இரசாயனம் பெண்களில் மார்புப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
பிரித்தானிய எக்ஸெட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்விற்காக 94 இளவயதினரது சிறுநீர் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதன் போது ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 86 சதவீதமானவர்களின் சிறுநீரில் பைபீனோல் ஏ இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்படுவது என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள நிலையில் இந்த இரசாயனம் மக்களது உடலில் சேர்வதை தடுப்பது சாத்தியமற்றதாக மாறியுள்ளதாக நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் இந்த ஆய்வில் பங்கேற்ற மேற்படி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பாடசாலையைச் சேர்ந்த பேராசிரியர் லோர்னா ஹரிஸ் தெரிவிக்கையில், “உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி பைபினோல் ஏ இரசாயனத்தை உள்ௌடுத்து வருகின்றனர். தற்போதுள்ள சட்டங்களின் பிரகாரம் இந்த இரசாயனம் எமது உணவில் சேர்வதை தவிர்ப்பது கடினமானதாகவுள்ளது. உணவுப் பொதியிடல் முறைகளில் எவை அந்த இரசாயனத்தைக் கொண்டிருக்கின்றன என அடையாளம் காண்பது சிரமமாகவுள்ளது” என்று கூறினார்.
பைபீனோல் ஏ இரசாயனம் மனித உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக்கூடியது என ஐரோப்பிய இரசாயன முகவர் நிலையம் ஏற்கனவே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக்கை கடினமாக்கப் பயன்படும் அந்த இரசாயனம் நீரிழிவு மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தக் கூடியது என அந்த முகவர் நிலையம் கூறுகிறது.
மேற்படி இரசாயனம் பற்றுச்சீட்டுகள், மூக்குக் கண்ணாடிகள் மற்றும் இறுவட்டு பெட்டிகள் என்பவற்றிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.