இது எங்கள் ஏரியா- லாச்சப்பலில் ரெலோவை எச்சரித்த விடுதலைப்புலிகள்

274

 

 

janaஇது எங்கள் ஏரியா, நீங்கள் இங்கு கால்வைக்க கூடாது என ரெலோ அமைப்பினரை விடுதலைப்புலிகள் எச்சரித்த சம்பவம் ஒன்று கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த நிலையில் சம்பந்தப்பட்ட பல தரப்பையும் தொடர்பு கொண்டு முழுமையான தகவலை இங்கே வெளியிடுகிறோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா வந்திருந்த ரெலோ அமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) சிவாஜிங்கம் ஆகியோர் பிரான்ஸ் சென்று லாச்சப்பலில் உள்ள இந்திரா உணவகத்தில் தமது கட்சி ஆதரவாளர்கள் உறுப்பினர்களுடன் கடந்த 09.10.2015 அன்று மாலை கலந்துரையாடல் ஒன்றை நடத்தி கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் நடைபெற்றது.

இச்சந்திப்பு நடைபெறுவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பிரான்ஸில் உள்ள விடுதலைப்புலிகள் குறுந்தகவல் மூலம் தமக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் அனுப்பி ரெலோ இயக்கத்தினர் கலந்துரையாடலை நடத்திய இந்திரா உணவகத்திற்கு முன்னால் கூடினர்.

அங்கு கூடியவர்கள் ஜனாவின் பெயரை கூறி வெளியே வா என சத்தமிட்டனர். மாலை வேளையில் லாச்சப்பலில் தமிழ் மக்கள் கூடுவது அதிகம். சிலர் சத்தமிட்டுக் கொண்டிருந்ததை அடுத்து பலரும் அங்கு கூடினர். அங்கு என்ன நடக்கிறது என புதினம் பார்ப்பதற்காகவே அங்கு பலரும் கூடினர்.

அதனை தொடர்ந்து தாங்கள் ரெலோ அமைப்பினருடன் பேச வேண்டும் என கோசமிட்டதை தொடர்ந்து உணவகத்திற்குள் இருவர் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் புலிகளின் குரல் இணைய வானொலியை நடத்தும் முரளி என்பவர். மற்றவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த கோபி என்பவர்.

உணவகத்திற்கு உள்ளே நுழைந்த இருவரும் மாகாணசபை உறுப்பினர் ஜனாவை பார்த்து நீ தேசத்துரோகி, பல கொலைகளை புரிந்தாய், விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்பட்டீர், என குற்றச்சாட்டுக்களை சுமத்திய போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

விடுதலைப்புலிகளால் தேசத்துரோகிகளாக்கப்பட்டு கொலைப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் நாங்கள் மட்டுமல்ல, அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்ற தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர்களும் தான் என ரெலோ தரப்பினர் பதிலுக்கு தெரிவித்தனர். அமிர்தலிங்கம் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பந்தனுக்கு சந்திரிக்கா அரசாங்க காலத்தில் அதிஉச்ச பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் யாரைத்தான் தேசத்துரோகிகள் என சொல்லவில்லை என ரெலோ தரப்பினர் பதிலுக்கு தெரிவித்தனர்.

தற்போது விடுதலைப்புலிகளின் மிகத்தீவிரமான ஆதரவாளராக மாறியிருக்கும் சிவாஜிலிங்கமும் அங்கு வந்திருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். நானும் விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்தேன். விடுதலைப்புலிகளின் கொலை அச்சுறுத்தலால் 12 வருடங்களாக நான் எனது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தேன். விடுதலைப்புலிகளும் கொலைகளை செய்தார்கள், எல்லா இயக்கங்களும் தான் கொலைகளை செய்தன என சிவாஜிலிங்கம் கூறினார்.

மிக மோசமான கொலைகளை புரிந்தவர்கள் விடுதலைப்புலிகள் தான், எல்லாரும் தான் கொலை செய்தோம். அது எல்லாம் கடந்த காலம், இப்போது அதை எல்லாம் ஏன் தூக்கி பிடிக்கிறீர்கள் என சிவாஜிலிங்கம் கடும் தொனியில் கூறினார்.

உங்களுடன் எங்களுக்கு பிரச்சினை இல்லை, ஜனா போன்றவர்களுடன் தான் எங்களுக்கு பிரச்சினை என சிவாஜிலிங்கத்தை பார்த்து அங்கு வந்திருந்த முரளி என்பவர் கூறினார்.
பரிஸ் நகரும் லாச்சப்பலும் எங்கள் ஏரியா, இங்கு நீங்கள் வரமுடியாது என எச்சரிக்கை தொனியில் விடுதலைப்புலிகள் கூறினர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பொலிஸார் ரெலோ அமைப்பினரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க உண்மைக்கு புறம்பாக சில இணையத்தளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகின.

செல்வம், ஜனா ஆகியோர் பரிஸ் லாச்சப்பலில் நையப்புடைக்கப்பட்டார்கள் என்றும், ஜனாவினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களே இத்தாக்குதலை மேற்கொண்டனர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. அத்துடன் கூடியவர்களில் யாரும் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் இருக்கவில்லை என கூறப்படுகிறது.

ரெலோ அமைப்பினர் பிரான்ஸிற்கு அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு வருவது இது முதல் தடவையல்ல. கடந்த வருடமும் செல்வம் அடைக்கலநாதன், ஜனா ஆகியோர் பரிசிற்கு வந்திருந்தனர். அது போல கடந்த வருடத்தில் இரண்டு மூன்று தடவை இவர்கள் சுவிட்சர்லாந்திற்கு வந்து கூட்டங்களை நடத்தியிருந்தனர்.

2001ஆம் ஆண்டு தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்க ஆரம்பிக்கும் வரை விடுதலைப்புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களுடன் மோதல் போக்கை கொண்டிருந்தது என்பதும் 2001ஆம் ஆண்டு டிசம்பர் தேர்தலின் பின்னர் முக்கியமாக 2002ஆம் ஆண்டு முற்பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க தலைவர்களை சந்தித்த பின்னர் இந்த இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்தன என்பதை யாவரும் அறிவர்.

கிழக்கில் சிவராம் தலைமையிலான ஊடகவியலாளர்களும் கொழும்பில் தமிழ்மாறன், போன்ற துறைசார் அறிஞர்களும் எடுத்த முயற்சியின் காரணமாக நான்கு தமிழ் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இது ஒரு பலமான அரசியல் சக்தி என்பதையும் அது காலத்தின் தேவை என்பதையும் உணர்ந்து கொண்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் அதனை ஏற்றுக்கொண்டார். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் தடவையாக நான்கு கட்சி தலைவர்கள் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வன்னியில் சந்தித்தார்.

கடந்த காலங்களை மறந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ரெலோ போன்ற இயக்கங்களை ஏற்றுக்கொண்டு அந்த இயக்கங்களின் தலைவர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தி கைகுலுக்கிய பின்னர் 15 ஆண்டுகள் கடந்த பின்னர் மீண்டும் பழைய சம்பவங்களை கிளறி தேசத்துரோகி பட்டங்களை வழங்க முற்படுவதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுவது இயல்பானதே.

விடுதலைப்புலிகளின் தலைவரே ஏற்றுக்கொண்டபின் அவருக்கு கீழே இருக்கும் சிலர் ஏனைய இயக்கங்களுக்கு தேசத்துரோகி பட்டங்களை வழங்க முற்படுவது பிரபாகரனின் தலைமையை இவர்கள் கேள்விக்குரியதாக்குகிறார்கள் என்பதே உண்மையாகும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிர்ப்பு காட்ட முற்படுபவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கருணா பிள்ளையான் டக்ளஸ் போன்றவர்கள் வரும் போது ஏன் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை?

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கு பலமான அரசியல் சக்தி ஒன்று இருக்க கூடாது என சிங்கள பேரினவாத அரசு பல முனைகளில் செயல்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்கும் சிதைப்பதற்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சதிகளை சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்டது.

தமிழ் மக்களின் அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்க வேண்டும் சிதைக்க வேண்டும் என்ற சிங்கள பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலை ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகம் இன்று பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

அந்த சந்தேகத்தை உண்மை என நிரூபிக்கும் வகையிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இது போன்ற நோக்கங்களை கொண்டே அண்மைக்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள் என காட்டும் வகையிலான பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.
கடந்த பொதுத்தேர்தலில் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற வேண்டும் என செயல்பட்டனர். பெருந்தொகை பணத்தை இதற்காக செலவழித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அடைந்த தோல்வியின் வெளிப்பாடே அண்மைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்படும் சம்பவங்களாகும்.
விடுதலைப்புலிகளின் இத்தகைய அத்துமீறல்கள் வன்முறைகளை ஐரோப்பிய நாடுகள் நீண்டகாலத்திற்கு பொறுத்துக்கொள்வார்கள் என சொல்வதற்கு இல்லை. வன்முறைகளையும் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழர்களும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

இது போன்ற மற்றொரு சம்பவம் சுவிட்சர்லாந்து பாசல் நகரில் நடைபெற்றது.

கடந்த 08.10.2015 அன்று வியாழக்கிழமை சுவிட்சர்லாந்து பாசல் நகரில் தமிழரசுக்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்து வந்திருந்த மாவை சேனாதிராசாவுடனான கலந்துரையாடலுக்கு சுவிஸ் பாசல் நகரில் உள்ள செந்தமிழ்சோலை என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடலுக்கு செந்தமிழ்சோலை என்ற அமைப்பின் உறுப்பினர்களுக்கும் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களுக்குமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டம் ஊடகவியலாளர் சண்.தவராசா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அழைப்பு இன்றி பேர்ண் நகரிலிருந்து விடுதலைப்புலிகளின் இளையோர் அமைப்பைச் சேர்ந்த யது என்பவரும், மட்டக்களப்பு பிள்ளையாரடியைச் சேர்ந்தவரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருமான காந்தன் என்பவரின் மகனும் பாசல் மாநகரில் உள்ள விடுதலைப்புலிகளின் இளையோர் அமைப்பை சேர்ந்த யனா என்பவரும் சமூகமளித்திருந்தனர்.

மாவை சேனாதிராசா பேசிக்கொண்டிருந்த போது இடையில் கேள்வி கேட்டு குழப்பத்தை ஏற்படுத்த யது என்ற நபர் முற்பட்ட போது கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சண்.தவராசா அதனை தடுத்து அவரின் பேச்சு முடிந்ததும் கேள்வி கேட்கலாம் என தெரிவித்தார்.

மாவை சேனாதிராசாவின் பேச்சு முடிந்ததும் மாவை சேனாதிராசாவுடன் தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்க முற்பட்டனர். சுமந்திரனா விக்னேஸ்வரனா அதிகம் படித்தவர்? தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் துரோகிகள் என அக்கூட்டத்தில் பொருத்தமற்ற கேள்விகளை கேட்டு குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டனர்.

1986ஆம் ஆண்டு பிரபாகரன் தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் இருந்த வேளையில் அவரை பார்க்க சென்ற மாவை சேனாதிராசாவை சந்திக்க தலைவர் பிரபாகரன் அனுமதியளிக்கவில்லையே அப்படியானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார் என எப்படி சொல்ல முடியும் என்ற கேள்விகளையும் எழுப்பினர்.

இந்த கேள்விகளை ஒருவர் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்த மற்றய இருவரும் மின்சாரத்தை அணைத்து விட்டு மாவை சேனாதிராசாவை தாக்குவதற்கு திட்டமி;ட்டனர் என்றும் ஆனால் கூட்டத்தை ஏற்பாடு செய்த செந்தமிழ்சோலை அமைப்பினரால் இச்சதி முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை உறுதி செய்ய முடியவில்லை. டக்ளஸ் தேவானந்தா மீது சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தியதை போல மாவை சேனாதிராசா மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று வெளியான செய்திகளை அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஊடகவியலாளர் தவராசா மறுத்துள்ளார்.

அவ்வாறு நடைபெற வாய்ப்பு இருக்கவில்லை, ஏனெனில் அங்கு கூடியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாவை சேனாதிராசாவின் ஆதரவாளர்கள் என சண். துவராசா கூறினார்.

ஆனால் மாவை சேனாதிராசாவை அவமானப்படுத்துவதற்கு திட்டமிட்டு இந்த மூவரும் அனுப்பபட்டிருக்கின்றனர் என்பதை இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சண்.தவராசா ஏற்றுக்கொள்கிறார்.

1986ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் பற்றி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான பிள்ளையாரடி காந்தன் என்பவர் போன்ற ஒருசிலருக்கே தெரிந்திருந்தது. எனவே இந்த இளைஞர்களை கேள்வி கேட்டு குழப்பங்களை ஏற்படுத்துமாறு தூண்டிவிட்டதில் பிள்ளையாரடி காந்தன் போன்றவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது.

தாங்கள் கேள்வி கேட்பதை ஒலிப்பதிவு செய்து சில இணையத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். மாவை சேனாதிராசா கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது என அறிந்து கொண்டு அங்கு கேள்வி கேட்டு குழப்பங்களை ஏற்படுத்திய சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும். அவருக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கிறது என காட்டுவதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டது என்பதை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

சுவிட்சர்லாந்து பாசல் நகரில் உள்ள செந்தமிழ்சோலை என்ற அமைப்பினர் விடுதலைப்புலிகளுக்கு மிக நெருக்கமான ஆதரவாளர்கள். ஆனால் அண்மையில் மாவை சேனாதிராசா கலந்து கொண்ட கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் இளையோர் அமைப்பினர் மேற்கொண்ட தகாத செயல்களினால் செந்தமிழ்சோலை அமைப்பினர் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாசல் நகரில் குழப்பங்களை ஏற்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட நபர் தாங்கள் விக்னேஸ்வரனின் ஆட்கள் என கூறியிருந்தனர். எங்கள் விக்னேஸ்வரன், உங்கள் சுமந்திரன் என அந்நபர் அடிக்கடி கூறினார். உண்மையில் அவர்கள் விக்னேஸ்வரனின் ஆட்களாக இருந்தால் இங்கு ஒரு கேள்வி எழுகிறது. முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஐரோப்பிய நாடுகளில் வன்முறைக்குழுக்களை வைத்திருக்கிறாரா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்றவர்களின் பெயர்களை சொல்லி வன்முறையில் ஈடுபடுவதை விக்னேஸ்வரன் போன்றவர்கள் தொடர்ந்து அனுமதிக்கப் போகிறார்களா என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

– இரா.துரைரத்தினம்-

SHARE