பாக்டீரியா – இந்த வார்த்தையை கேட்டாலே அது மனித உடலுக்கு கெடுதல் மட்டுமே தரும் தவறான விடயம் என்றே பொதுவாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது.
ஆனால் பாக்டீரியாக்களில் மனித உடலுக்கு வலு சேர்த்து, நல்லது செய்யும் வகைகளும் இருக்கிறது தெரியுமா?
ஆம், அப்படியான ஒரு வகை தான் புரோபயாடிக்ஸ் (probiotics) பாக்டீரியா ஆகும்.
புரோபயாடிக்ஸ் ஓர் உயிருள்ள நுண்ணுயிரி. ஓர் அற்புத உணவும்கூட. இதைப் போதுமான அளவு உட்கொண்டால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
தினமும் உணவு டயட்டில் புரோபயாடிக் பாக்டீரியா அடங்கிய உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
சரி எந்தெந்த உணவு பொருட்களில் அதிகளவு புரோபயாடிக்ஸ் உள்ளது?
தயிர், நொதித்த மோர், முட்டைகோசுகள், ஊறுகாய், பால் பொருட்கள், புளிக்க வைத்த உணவுப் பொருட்கள், செறிவூட்டப்பட்ட உணவு வகைகள், வெண்ணெய் ஆகிய உணவு பொருட்களில் அதிகளவு புரோபயாடிக்ஸ்கள் கிடைக்கின்றன.
புரோபயாடிக்ஸ்கள் அடங்கிய உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ஆரோக்கியத்தை பாதுகாக்க அனைத்து வயதினரும் புரோபயாடிக்ஸ்களை பயன்படுத்தலாம். அது வாழ்நாளை நீட்டிக்கும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!
பலவகையான நோய்களை உருவாக்கும் கிருமிகள் உடலுக்குள் செல்லாமல் இருக்க புரோபயாடிக்ஸ் பயன்படுகிறது.
புரோபயாடிக்ஸ் பாக்டீரியா வகை உணவுகளை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், நரம்பியல் சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் உடல் பருமனையும் தடுக்கிறது.
பெப்டிக் அல்சர், இரைப்பைப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியைப் புரோபயாட்டிக்ஸ் தடுக்கிறது.
குடலில் நோய் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது