இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழீழப் பத்திரிகையாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் “போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்த் திரைப்படம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மன்ற மனித உரிமை ஆணைய அரங்கில் வியாழக்கிழமைதிரையிடப்படுகிறது.
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழீழ பத்திரிகையாளர் இசைப்பிரியா கொடூரமாக கொல்லப்பட்டது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு கர்நாடகத்தைச் சேர்ந்த இயக்குநர் கு.கணேசன், “போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை, ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மன்ற மனித உரிமை ஆணைய அரங்கில் அக்.1-ஆம் தேதி நண்பகல் 1 மணிக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்குத் திரையிட்டுக் காட்டத் திட்டமிட்டிருக்கிறார்.
இதுகுறித்து ஜெனீவாவில் இருந்து தினமணி நிருபரிடம் அவர் கூறியது:
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் அந் நாட்டு ராணுவத்தினரால் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட பத்திரிகையாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையை “போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் தமிழில் திரைப்படமாகத் தயாரித்திருக்கிறோம்.
இந்தத் திரைப்படத்தை இந்தியாவில் திரையிடுவதற்கு மத்திய தணிக்கைக் குழு அனுமதி அளிக்கவில்லை. இந்தத் திரைப்படத்தை வெளியிட்டால், அது இலங்கை அரசுடனான நல்லுறவைப் பாதித்துவிடும் என்று தணிக்கைக் குழு விளக்கமளித்தது.
எனவே, ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு இந்தப் படத்தை திரையிட முடிவுசெய்து, அதற்கான அனுமதியைப் பெற்றுள்ளேன். பல நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு நேரில் அழைப்பு கொடுத்துள்ளேன்.
இதுதொடர்பாக, எனக்கு கொலை மிரட்டலும் வந்துள்ளது. உயிரைப் பற்றி எனக்கு கவலையில்லை. மனித நேயத்திற்காகவும், நீதி நியாயத்திற்கும் எனது குரல் கடைசி வரை ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.